கோவையில் சாலைப் பணியின் தரம் குறித்து முதலமைச்சர் திடீர் ஆய்வு
சாலைப்பணிகளின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்
கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் ரூ.1.25 கோடியில் சீரமைக்கப்படும் சாலையின் தரம் குறித்து நேற்று இரவு திடீரென்று ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், மேலும் பொதுமக்களிடம் குறை கேட்டார்.
கோவையில் பிற கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சின்னியம்பாளையத்தில் நடைபெற்றது.
இதை தொடர்ந்து கருமத்தம்பட்டி நாலுரோடு பகுதியில் விசைத்தறியாளர்கள், கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அங்கிருந்து முதலமைச்சர் காரில் புறப்பட்டார். இதற்கிடையே கோவை மாநகராட்சி 52-வது வார்டு பீளமேடு ஹட்கோ காலனியில் ரூ.1 கோடியே 28 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்றது. இந்த நிலையில் சாலை சீரமைப்பு பணியை நேற்றிரவு திடீரென்று முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் சாலையை துளையிட்டு, அதன் தரம் குறித்து முதலமைச்சர்.ஸ்டாலினிடம் விளக்கி கூறினர். அப்போது முதலமைச்சரை பார்க்க அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். அவர், பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர், பொதுமக்களிடம் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டார். அப்போது அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, ஆர்.காந்தி, கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வரும் கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் தயாநிதிமாறன் எம்.பி.யின் உறவினரான ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும் மல்லிகை ராம்குமாரின் வீட்டிற்கு சென்றார். அங்கு ராம்குமாரின் தாயார் இறந்ததற்கு ஆறுதல் கூறி, அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் காரில் விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu