கோவை நேரு விளையாட்டரங்கில் சிந்தடிக் ஓடுதளம்: காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்
நேரு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிந்தெடிக் ஓடுதளம்
கோவை வ.உ.சி. மைதானம் அருகே காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள நேரு ஸ்டேடியம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இம்மைதானத்தில் 400 மீட்டர் நீளத்தில் நீள்வடிவ ஓடுதளம் உள்ளது. தினமும் காலை நேரத்தில் சராசரியாக 300 வீரர்களும், மாலை நேரத்தில் 400 வீரர்களும் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம் போன்ற தடகளப் போட்டிகளில் பயிற்சி பெற்று வந்தனர்
அரசுத் துறைகள் சார்பிலும், பல்வேறு விளையாட்டு சங்கங்கள் சார்பிலும் இம்மைதானத்தில் சுழற்சி அடிப்படையில் தொடர்ச்சியாக தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டது. இம்மைதானத்தில் வீரர்கள் சர்வதேச தரத்தில் ஓட்டப் பயிற்சி பெற ஏதுவாக, கடந்த 2008-ம் ஆண்டு செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட்டது.
பல ஆண்டுகள் ஆகி விட்டதால், செயற்கை ஓடுதளம் ஆங்காங்கே சேதமடைந்தது. இதனால் ஓட்டப் பந்தய வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டன. இதனை சீரமைத்துத் தர வீரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 2008-ல் அமைக்கப்பட்ட ஓடுதளம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் ஓடுதளத்தை சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதிதாக சிந்தடிக் ஓடுதளம் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.6.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. மேலும் விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடந்தது.
சிந்தடிக் ஓடுதளம் பாதை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தடிக் ஓடுதளம் பாதையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், தடகள விளை யாட்டு வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
சிந்தடிக் ஓடுதளம் தங்களின் பயிற்சி மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர். மேலும், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நேரு விளையாட்டு அரங்கின் ஓடுதளம் மற்றும் மைதானம் ஆகியவற்றை சீரமைத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu