கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைக்க கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
namakkal news, namakkal news today- ராகிங் தடுப்பு சட்ட விழிப்புணர்வு (மாதிரி படம்)
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த அறிக்கையில், கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி கல்லூரி முதல்வர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதன்படி ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல் வேண்டும், ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும்.
ராகிங் புகார் பெட்டி, ஆலோசனை பெட்டியை அமைத்து ராகிங் கொடுமையை அறவே ஒழிக்க முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வரும், துறை தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கடந்த 2019-ம் ஆண்டின் அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மகாராஷ்டிர அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இருக்கும் ராகிங் தடுப்பு குழுக்களில் அக்கல்லூரியின் தலைமை மற்றும் துறைசார்ந்த தலைவர்கள், பொதுத்துறை முக்கிய தலைவர்கள், காவல் துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர், மாணவர் இருப்பது போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் ராகிங் குழுக்கள் அமைக்க வேண்டும்.
இதுதொடர்பாக ஆய்வு செய்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து ராகிங் குறித்த அறிக்கை ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu