சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுக வேட்பாளர் வெற்றி: நீதிமன்றம்
சின்ன தடாகம் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் சௌந்திரவடிவு
கோவை மாவட்டம் சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த பதவிக்கு திமுக ஆதரவு பெற்ற சுதா, அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு மற்றும் மல்லிகா ஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது திமுக ஆதரவு வெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற மறுவாக்கு வாக்கு எண்ணிக்கையில் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு 2,554 வாக்குகளும், சுதா 2,551 வாக்குகளும் பெற்றதாகவும், இதனால் 3 வாக்குகள் வித்தியாசத்தில் சௌந்திரவடிவு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, திமுக வேட்பாளர் சுதா, கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சின்னதடாகம் ஊராட்சிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கடந்த மாதம் 5ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து, கடந்த மாதம் 24ஆம் தேதி குருடம்பாளையம் அருணா நகர் சமுதாயக்கூடத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகர் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவித்தார். அதன்படி, மொத்தம் பதிவாகிய 5,357 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் சௌந்திரவடிவு 2,553 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுதா 2,551 வாக்குகளும், மல்லிகா 65 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அதிமுக வேட்பாளர் சௌந்திரவடிவு 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu