மருதமலை கோவிலில் இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி
மருதமலை முருகன் திருக்கல்யாணம்
கோவை மேற்கு மலை தொடர்ச்சியில் மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது முருக பக்தர்களால் ஏழாவது படை வீடு என போற்றப்படுகிறது. இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான இன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. காலை 8.30.மணி அளவில் யாகசாலை கலசங்களில் உள்ள தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
காலை 9 மணிமுதல் 10.30 மணி அளவில் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது வள்ளி மஞ்சள் பட்டு, தெய்வானை சிவப்பு பட்டு அணிந்திருந்தனர். சுப்பிரமணிய சுவாமி வெண்பட்டு உடுத்தி மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
அதன்பிறகு பக்தர்களின் மொய்ப்பணம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மொய் செய்தனர். ஒட்டுமொத்தமாக ரூ.86,200 மொய்ப்பணம் வசூலானது.
தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் தம்பதி சமேதராக பல்லக்கில் வீதி உலா வந்தனர்.
நேற்று சூரசம்ஹாரம் மற்றும் இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இந்த 2 முக்கிய விழாக்களிலும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் மலைப்பாதை வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரும் இரு நாட்கள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதித்தார். இதனால் பக்தர்கள் கோவில் பேருந்துகளிலும் , நடைபாதை வழியாகவும் சென்றனர்.
இன்று காலை நடை பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் சென்றனர். முதியவர்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு மலையை அடைந்தனர். அங்கு சென்று பார்த்த பக்தர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவில் வளாகத்தில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் நின்றன.
அந்த கார்களை பார்த்ததும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை மட்டும் கால்நடையாக மலையேறச் செய்து விட்டு அவர்களை மட்டும் எப்படி காரில் வர அனுமதித்தனர் என ஆதங்கப்பட்டனர். சாதாரண பக்தர்களுக்கு ஒரு நியாயம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் அங்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததை தங்கள் செல்போனில் படமும் பிடித்து சமூகவலைதளத்தில் பரப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu