சாலை வசதி இல்லாததால் பிரசவித்த பெண்ணை சுமந்து செல்லும் பரிதாப நிலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவமான நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை சாலை வசதி இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் வீட்டுக்கு உறவினர்கள் சுமந்து சென்றனர்.
இந்நிலையில் வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்ய வந்த கோவை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் நெடுங்குன்று மலைக்கிராம மக்கள் சாலை வசதி இல்லாததால் பிரசவித்த பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை உறவினர்கள் சுமந்து வருவதை அறிந்தார்.
இதனையடுத்து உடனே அந்த கிராமத்துக்கு நேரில் சென்று வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மருத்துவம் சார்ந்த குறைபாடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் கிராம சுகாதார செவிலியர்கள் வருகை, மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் வருகை, வால்பாறை அரசு மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் குறித்து விசாரித்தார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவமான நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை சாலை வசதி இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் வீட்டுக்கு உறவினர்கள் சுமந்து சென்றது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு கிராம மக்கள், எங்களது கிராமத்திற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் வில்லோணி எஸ்டேட் ஒத்தக்கடை வரை மட்டுமே சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி இல்லை. வனத்துறை சார்பிலோ, நகராட்சி நிர்வாகம் சார்பிலோ சாலை வசதி ஏற்படுத்தி தரலாம். ஆனால் எந்த துறை சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.
பின்னர் அவர்கள் சுமந்து வந்த பெண்ணின் உடல் நலம் குறித்து இணை இயக்குனர் ராஜசேகரன் வீட்டுக்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், மாவட்ட மூலம் சாலை வசதி செய்து கொடுக்கவும், வால்பாறை அரசு மருத்துவமனையில் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்கவும், அங்குள்ள ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கவும், மருத்துவ சேவை முழுமையாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu