வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தேர்தல் பிரிவு செயலாளராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அப்போது எதிர்முனையில் இந்தியில் பேசிய மர்மநபர், தான் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தன் என்றும் மும்பையில் வெடிகுண்டு வைத்து உள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. அந்த நபர் இந்தியில் பேசியது, சுப்பிரமணியத்துக்கு புரியவில்லை.
இதையடுத்து அவர் தனது அருகே இருந்த நண்பரான செந்தில்குமாரிடம் கொடுத்தார். அவர், ஆங்கிலத்தில் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபரும் ஆங்கிலத்தில் மும்பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் விரைவில் வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சியான இவர்கள் கோவை மாநகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோவை காவல்துறையினர் மும்பை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் சுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோரை கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் மற்றும் மும்பை காவல்துறையினர் விசாரித்தனர்.
தொடர்ந்து, அவர்களுக்கு வந்த செல்போன் எண்ணை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த மர்மநபர் இன்டர்நெட்டில் இருந்து பேசியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஐ.டி. யாருடையது. எங்கிருந்து அழைத்தார். அவர் கூறியது உண்மைதானா? என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகிறார்கள்.
இன்னும் சில தினங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் கும்பிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சமயத்தில் மும்பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகருக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது கோவையில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட், சந்தை பகுதி, கடைவீதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வீதிகளில் வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.
பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பேருந்து நிலையங்களிலும் யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிகின்றனரா? என்பதையும் கண்காணிக்கின்றனர். பேருந்துகளில் ஏறியும் சோதனை மேற்கொள்கின்றனர்.
இதுதவிர வெடிகுண்டு நிபுணர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கோவை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் மெட்டல் டிடெக்கர், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்கின்றனர்.
கோவில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை சந்திப்பு ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புப்படை போலீசார் இணைந்து ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மற்றும் தண்டவாளங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களது உடமைகளும் சோதனை செய்யப்படுகிறது. சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடைவீதிகளில் காவல்துறையினர் சாதாரண உடை அணிந்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு வரும் பயணிகளும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்க ப்பட்டு வருகிறார்கள். இதுதவிர மாவட்ட எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
வாகனங்களில் வருபவர்களிடம் உரிய ஆவணம் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து விசாரித்த பின்னர் கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu