தமிழக-கேரள எல்லையில் லாரிகளை மறித்து போராட்டம்: விவசாயிகள் எச்சரிக்கை

தமிழக-கேரள எல்லையில்  லாரிகளை மறித்து போராட்டம்: விவசாயிகள் எச்சரிக்கை
X

கோப்புப்படம் 

கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்காவிட்டால் லாரிகளை மறித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்காவிட்டால் தமிழக-கேரள எல்லையில் லாரிகளை மறித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: -

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் 80 கல்குவாரிகள் மட்டுமே அரசின் அனுமதியை பெற்று முறையாக இயங்கி வருகிறது. 120க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அரசின் முறையான அனுமதி இல்லாமல் உடைகல், குட்டுக்கல், ஜல்லி கற்கள், கருங்கற்கள், பி.சாண்ட், எம்.சாண்ட் ஆகியவற்றை வெட்டி எடுக்கின்றனர்.

போலியான நடைச்சீட்டு தயாரித்து கோவையில் இருந்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தி செல்கின்றனர். அரசின் முறையான அனுமதி இல்லாமல் இந்த கனிம வளங்கள் ராட்சத லாரிகளில் தினமும் தோராயமாக 2 ஆயிரம் லோடுக்கும் அதிகமாக 15 ஆயிரம் யூனிட்டுகளுக்கும் மேல் கடத்தப்படுகிறது.

கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தும் லாரிகளில் ஒரு யூனிட்டுக்கு ரூ.400 என சிலர் மிரட்டி வசூலிக்கின்றனர். வாளையாறு, வேலந்தாவளம், உழல்பதி, ஜமீன் காளியாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, செம்மனாம்பதி ஆகிய சோதனை சாவடிகளில் அடியாட்கள் இருந்து கொண்டு வசூலிக்கின்றனர். மேலும் கனிமவளக் கொள்ளை குறித்து கேள்வி எழுப்புபவர்கள் மிரட்டப்படுகின்றனர்.

இந்த கடத்தலுக்கு சில அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். அனுமதியை மீறியும், அனுமதி இல்லாமலும் கல்குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் வெட்டி கடத்தப்படுவதால் விவசாய நிலங்கள், நீராதாரங்கள் பாதிக்கப்படுவதோடு நில அதிர்வுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே கனிமவளங்கள் கடத்தப்படுவதை அரசு நடவடிக்கை எடுத்து தடுக்காவிட்டால் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை தமிழக-கேரள எல்லையில் விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்த உள்ளோம்.

தமிழக- கேரள எல்லையில் போராட்டமும் நடத்தப்படும். எனவே தமிழக முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!