அதிமுக, பாஜக உறவில் எந்த பாதிப்பும் இல்லை.. கோவையில் அண்ணாமலை பேட்டி…
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. (கோப்பு படம்).
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது பெயருக்குப் பின்னால் எம்.பி மற்றும் எம்எல்ஏ என போட்டு கொள்வதற்காக நான் கட்சிக்கு வரவில்லை. பாஜக வளர வேண்டும் என்பது தான் எனது இலக்கு. அதற்காகத்தான் என்னுடைய முயற்சி. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளர கூடாது.
அப்படி வளர்ந்தாலும் கூட அது தொடர்ச்சியானதாக இருக்காது. பாஜக தமிழக மக்களின் அன்பை பெற்று வளர வேண்டும். பாஜகவை அதிமுகவுடன் இணைத்து பேச வேண்டாம். ஆளும் கட்சியுடன் ஒப்பிடவும் வேண்டாம். மற்றக் கட்சியில் இருக்கும் எல்லா தலைவர்களும் ஆட்சிக்கு வந்த பிறகு தான் இணைந்து இருப்பார்கள்.
ஆனால், பாஜக தொண்டர்கள் எப்பொழுது ஆட்சிக்கு வரும் என தெரியாமல் காத்து இருக்கின்றனர். அதிமுகவை பாஜகவுடன் ஒப்பீடு செய்வது சரியான ஒப்பீடு கிடையாது. நான் தலைவராக இருக்கும் வரை இந்த கட்சி இப்படித்தான் இருக்கும்.
ஆட்சிக்கு வருவோம் என்று சொல்வது எளிது. அப்படி சொல்ல நான் விரும்பவில்லை. எனது தொண்டர்களையும் அப்படி வழிநடத்த விரும்புவதில்லை. சில இடங்களுக்கு செல்ல அனைத்து விமர்சனங்களையும் கடந்து தான் செல்ல வேண்டும். அதே வேளையில் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் அண்ணாமலை பதில் சொல்ல தேவையில்லை.
எல்லா கட்சியும் வளர்ந்து வந்த பாதை வேறு. ஆனால், பாஜக வளரும் பாதை வேறு. அதிமுகவினர் யார் கருத்து சொன்னாலும் அது அவர்களுடைய கருத்துக்கள். அது அவர்களுடைய அரசியல் அனுபவத்தை வைத்து சொல்கின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிடவில்லை.
அதிமுக, பாஜக இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் அவர்களது கருத்தை கூறுகின்றனர். நாங்கள் எங்களது கருத்தை கூறுகின்றோம். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அதை தடை செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. ஆளுநர் சில கேள்விகள், சந்தேகங்களை எழுப்பி இருப்பார். அதனை சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானமாக கொடுத்தால் அதற்கு ஆளுநர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும்.
யாரையோ சமாதானப்படுத்த ஆளுநரை கையெழுத்திட நிர்பந்தம் செய்ய வேண்டாம். சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரும் மறுபடியும் ஆராய்ந்து அதில் இருக்கும் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும். ஆளுநர் சும்மா திருப்பி அனுப்ப மாட்டார்.
எதாவது விளக்கம் கேட்டு இருப்பார். அதற்கு தமிழக அரசும், சபாநாயகரும் ஆளுநர் எழுப்பி இருக்கும் கருத்தை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள அதை பொது வெளியில் வெளியிட வேண்டும். சிலர் கட்சியில் இணைவதும், வேறு கட்சிக்கு போவதும் சகஜம் தான்.
திமுகவில் இருக்கும் பாதி அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான். விலகி செல்பவர்கள் போகும் இடத்தில் விசுவாசமாக இருக்க வேண்டும். அரசியலில் என்ன சாதிக்க வேண்டும் என நினைத்தீர்களோ அதை செய்யுங்கள். இன்னும் ஆறு மாதத்தில் பெரிய தலைகள் கட்சியில் இருந்து வெளியில் செல்வதற்கும், பெரிய தலைகள் இங்கு வருவதற்கும் வாய்ப்பு உண்டு என அண்ணாமலை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu