கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்துவோம்.. கோவையில் அண்ணாமலை பேச்சு...
கோவையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
கோவையில் இருந்து எந்தவித அனுமதியும் இல்லாமல் லாரிகளில் கேரள மாநிலத்துக்கு கனிமவளங்கள் கடத்திச் செல்லப்படுவதாக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நடைபெறும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கிணத்துக்கடவு பகுதியில் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:
துருக்கியில் 6.2 ரிடர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏராளமானோர் பலியாகிய நிலையில், அங்கு மீட்பு பணியில் ஈடுபட இந்திய பாதுகாப்பு படையினர் உயிரைக் காப்பாற்ற அங்கு சென்றார்கள். கோவை பொள்ளாச்சியிலும பூகம்பம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 1900 ஆண்டு இந்தப் பகுதியில் நிகழ்ந்த பூகம்பத்தில் ஒன்பதாயிரம் பேர் இறந்துள்ளார்கள்.
சுதந்திரம் பெற்றது முதல் குவாரிகளில் கல் மண் எடுத்ததை காட்டிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு குவாரிகளில் 220 அடி வரை கனிமவளங்களை எடுத்து உள்ளார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பீகார் பகுதியில் நிலக்கரி எடுத்தவர்களை பாஜக அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தமிழகத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கல், மண் இரண்டையும் சுரண்டி வருவதால் அந்த பகுதியில் தண்ணீர் குறைந்து விடும் சூழல் உருவாகிறது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி வருமானம் வரும் நிலையில், கனிம வளத்தின் மூலமாக மட்டும் 9000 கோடி கிடைத்து வருகிறது. லாரிகளில் 12 யூனிட் மணல் ஜல்லி எடுத்து அதில் மூன்று யூனிட்டுக்கு மட்டுமே பணம் செலுத்துகிறார்கள். தமிழக அரசு டிரிப் ஷீட் கொடுப்பது போலவே தனியார் நிறுவனம் சார்பில் trip sheet வழங்கி மாபியா கும்பல் கொள்ளையடித்து வருகிறது.
கேரளாவிற்கு ஒரு நாளைக்கு 1500 லாரிகள் கனிமவளங்கள் கோவை மாவட்டத்தில் இருந்து போகிறது. அதனால் 12 ஆயிரம் யூனிட் கொள்ளை போவதால் அரசுக்கு வருமானம் இல்லாமல் போகிறது. கேரளா கார்ட்ஸ் ஒன் கன்ட்ரி என கூறி அங்கு ஆற்று மணல் எடுக்க முடியாது. கோழி கழிவுகளும் கொட்ட முடியாது. ஆகையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி வருகிறார்கள்.
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2024 இல் கூட்டனி வைத்து துணை பிரதமர் வாங்கிவிடலாம் என நினைத்து விட்டுக் கொடுத்து வருகிறார். தமிழக அரசுக்கு 20 நாட்கள் கெடு கொடுக்கிறோம். 21 ஆம் நாள் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் எனற முறையில் எனது தலைமையில் கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகள் செக்போஸ்டில் தடுத்து நிறுத்தப்படும்.
செக்போஸ்டில் பாரதிய ஜனதா தொண்டர்கள் 3 ஷிப்ட் கால அடிப்படையில் பணி புரிவார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சாப்பாடு பணம் என 20 நாட்களாக தொடர்ந்து திமுக வினர் கொடுத்தார்கள். பட்டு புடவை, சில்வர் தட்டு, கம்மல் என பல்வேறு பொருட்களும் அங்கு கொடுக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தது மட்டுமல்லாமல் உதயநிதி படத்தையும் போட்டு காண்பித்துள்ளனர்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தின் கடைசி நாளில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் எப்போது வழங்குவோம் என பட்ஜெட்டில் அறிவிப்போம் என தெரிவித்து உள்ளார். ஆயிரம் ரூபாய் பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறவில்லை. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அங்கீகாரம் அளித்தால் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும். 400 எம்பிகளுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமையும் என்று அண்ணாமலை பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பாஜக பொது செயலாளர் முருகானந்தம், விவசாய அணி தலைவர் நாகராஜ் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu