அரசியலிலும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.. கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி...

அரசியலிலும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.. கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி...
X

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

திரைப்படங்களைப் போல அரசியலிலும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விதிமீறல் என்பது 500 வழக்குகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் இந்த மாதிரி அராஜக தேர்தலை ஏற்கிறார்களா?. இந்த மாதிரி பரிசுப் பொருட்களை கொடுத்து தான் தேர்தல் நடத்த வேண்டுமா? அப்படிபட்ட கட்சிகள் இருக்கனுமா? அப்படி தான் வாக்களிக்க வேண்டுமா? என மக்களிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒரு வாக்காளர்களுக்கு சராசரியாக 20,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து உள்ளனர். இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசியல் வளர்ச்சி பின்னால் செல்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் தமிழகத்தை விட வளர்ந்து விடும்.

கொள்ளை அடிக்கும் பணத்தை தேர்தலின்போது வெளியே எடுக்கின்றனர். ஆட்சியில் கமிஷன் பெற்று சம்பாதித்த பணத்தை பினாமி மூலம் துபாய்க்கு அனுப்பி, அங்கிருந்து மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து தேர்தலில் செலவு செய்யப்படுகிறது.

இதனால், அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர். இளைஞர்களை அரசியலில் வாருங்கள் என்று சொன்னால், ஈரோடு கிழக்கு தேர்தலை பார்த்ததும் ஓடுகின்றனர். ஒரு தேர்தலுக்கு தொகுதிக்கு 45 கோடி ரூபாய் , இடைதேர்தல் என்றால் 100 கோடியை தாண்டுகிறது.

ஆளுங்கட்சிக்கு அதுவே 250 கோடி வரை செலவாகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பான எந்த வழக்கும் நீதிமன்றங்களில் நிற்பதில்லை. எனவே, அதுதொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அரவக்குறிச்சி, திருமங்கலம் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் புதியவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள். லஞ்சம் வாங்குவது போல் தான் ஓட்டுக்கு பணம் வாங்குவதும். முதலில் பணம் வாங்குவது கஷ்டம் என்றாலும் பிறகு அதுவே பழகிடும்.

அரவக்குறிச்சியில் தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை, அதன் வளர்ச்சி அதலபாதாளத்தில் உள்ளது. அதுபோன்று, ஈரோடு கிழக்கு தொகுதியும் மாற வேண்டுமா?. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் 39 தொகுதிக்கும் இந்த புற்றுநோய் பரவ வேண்டுமா?.

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என தெரியவில்லை. அவர்கள் அனைவரும் என்னை திட்டியது தான் அவர்கள் செய்த சாதனை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது முதல்வரின் அறிவிப்பு தேர்தல் தோல்வி பயத்தில் அறிவிக்கப்பட்டதாகும்.

முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தில் அறிவித்ததை வரவேற்கிறேன். அதேசமயம், அதை சொன்ன விதம், இடம், நேரம் தவறு. அறிவித்த படி பழைய பாக்கியை மீதமில்லாமல் பெண்களுக்கு வழங்க வேண்டும். தனது மகன் செங்கலை எடுத்து வந்தததால் தான் 2021 ஆட்சிக்கு வந்தோம் என கூறுவது முதல்வர் அவரையே அவமானம் படுத்திக் கொள்வதாகவும்.

2026 ஆம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவமனை வரும். இன்னும் எத்தனை நாள் செங்கல் விவகாரத்தை பேசி மக்களை ஏமாற்றுவார்கள் என தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் போல் அரசியலில் நடித்து வருகிறார். செங்கலை எடுத்தால், அந்த செங்கலை எடுத்து தோலை உரித்து உண்மையை சொல்வோம். 2024 தேர்தலில் பிரதமருக்காக மக்கள் வாக்களித்து தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்வோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil