கனிம வள கொள்ளையை கண்டித்து இன்று பாஜக ஆர்ப்பாட்டம்

கனிம வள கொள்ளையை கண்டித்து இன்று பாஜக ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்

கனிம வள கொள்ளையை கண்டித்து கிணத்துக்கடவுவில் இன்று பாஜகவினர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அதிகளவு விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னை, தக்காளி உள்பட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து விவசாயம் செய்து வருவதா, இந்த பகுதி விவசாயம் செழிக்கும் பகுதியாகவே காணப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் காய்கறிகள் கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இப்படி விவசாயம் நடந்து வரும் இந்த பகுதியில் கடந்த சில வருடங்களாக கல்குவாரிகள் அதிகரித்துள்ளன.

அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி குவாரிகள் 100 முதல் 250 அடி வரை வெட்டி எடுக்கப்பட்டு அந்த பகுதிகள் மிகப்பெரும் பள்ளங்களாக மாறி விட்டன. மேலும் முறைகேடாக கனிம வளத்தை கொள்ளையடித்து, கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து லாரிகளில் இங்கிருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு விவசாய அமைப்புகள், பல்வேறு எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கனிம வள கொள்ளையை தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம், அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கனிம வள கொள்ளையை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளை கண்டித்தும் பா.ஜ.க சார்பில் இன்று மாலை மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அண்ணாமலை இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள்விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பின்னர் காரில் நவக்கரைக்கு சென்ற அவர், அங்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் பா.ஜ.கவில் இணையும் விழாவில் கலந்து கொண்டார். இதில் விவசாயிகள் உள்பட பலர் தங்களை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைத்து கொண்டனர். தொடர்ந்து அங்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்ற மன்கீ பாத் நிகழ்ச்சியிலும் அண்ணாமலை பங்கேற்றார்.

பின்னர் அவர் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு பகுதிக்கு சென்றார். அங்கு மாலை 3 மணிக்கு கனிம வள கொள்ளையை கண்டித்து பா.ஜ.க சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!