60 ஆண்டு கனவு நனவானது: ஆவாரம் குளத்துக்கு வந்தது அத்திக்கடவு நீர்

ஆவாரம்குளத்திற்கு வரும் அத்திக்கடவு நீர்
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில், நீர் நிரப்பும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
இதில் அன்னுார் அருகே உள்ள குன்னத்துாராம்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து முதல்முறையாக கரியாம்பாளையம் ஊராட்சி, எல்லப்பாளையத்தில் அமைந்துள்ள, 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளத்துக்கு அத்திக்கடவு நீர் வந்தது,
இதையடுத்து, கவுசிகா நீர்க்கரங்கள், ஆவாரம் குளம் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூடி அத்திக்கடவு நீரை பூக்களை தூவி வரவேற்றனர். பின்னர் மகிழ்ச்சியுடன் கை குலுக்கி கொண்ட அவர்கள் அரசுக்கும், திட்டம் நிறைவேற போராடியவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
தன்னார்வலர்கள் கூறுகையில், இப்பகுதி மக்களின், 60 ஆண்டு கால கனவு தற்போது நனவாகி உள்ளது. ஆவாரம் குளத்தில் நீர் நிரம்பினால் சுற்றுவட்டாரத்தில், பல நூறு ஏக்கரில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும். குடிநீர் பிரச்சனையும் தீரும்.
தற்போது குளத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு மழை நீர் வரும் பாதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அத்திக்கடவு நீர் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சோதனை ஓட்டம் முடிந்து முழுமையாக ஆவாரம் குளத்திற்கு அத்திக்கடவு நீர் வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றனர்.
கீழ்கதவு கரை குளத்திலும் நேற்று முதல் முறையாக அத்திக்கடவு நீர் வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu