பள்ளிகள் திறப்பு: கோவையில் களைகட்டிய புத்தகப்பை, நோட்டு புத்தகங்கள் விற்பனை
காட்சி படம்
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு குழந்தைகளுக்கு புதிய நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் சீருடைகள் வாங்கும் பணியில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் குழந்தைகளுடன் கோவையில் உள்ள கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கூட்டம் அலை மோதி வருகிறது.
கோவை கடைவீதிகளில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், தண்ணீர் பாட்டில்கள், டிபன் பாக்ஸ், லஞ்ச் பேக் ஆகியவை விற்பனைக்கு வைக்கபப்ட்டுள்ளன.
அடுத்தபடியாக வணிக வளாகங்களில் மாணவர்களுக்கான ஸ்கூல் பேக் விதம்விதமான ரகம், தினுசுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு சோட்டாபீம், ஸ்பைடர்மேன், ஆங்கி ரிபேர்ட்ஸ் உள்ளிட்ட கார்ட் டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பல்வேறு ரகம்-டிசைன்களில், குழந்தைகளை கவரும் வகையில் ஸ்கூல்பேக் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
ஒரு ஸ்கூல் பேக் ரூ.1000 முதல் ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது. எனவே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாலையோரங்களில் விற்பனையாகும் ஸ்கூல் பேக்குகளை ரூ.300 முதல் ரூ.600 வரை மலிவான விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
இன்னொருபுறம் ஜவுளிக்கடைகளிலும் சீருடைகள் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கோவையின் அனைத்து பள்ளிகளுக்கு மான சீருடை துணிகள் பல்வேறு நிறம் மற்றும் டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளுக்கான சீருடைகளை வாங்கி செல்கின்றனர்.
பல்வேறு பகுதிகளில் தையல் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்து உள்ளது. இங்கு உள்ள டெய்லர்கள் மாணவர்களுக்கு சரியாக அளவெடுத்து சீருடைகள் தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவை கடைவீதியில் உள்ள சாலையோரங்களில் ஸ்கூல் பேக் விற்கும் வியாபாரிகள் கூறுகையில், பள்ளிகள் வருகிற 7-ம் தேதி திறக்க இருப்பதால் ஸ்கூல் பேக் விற்பனை களைகட்டி உள்ளது. இங்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் அதிகபட்சமாக ரூ.800 வரை புத்தகப்பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெற்றோர்களில் ஒரு சிலர் ஆன்லைன் மூலம் ஸ்கூல் பேக்குகளை வாங்குகின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் ஓரளவு பாதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் பெரும்பாலானோர் புத்தகப்பை வாங்குவதற்காக கடை வீதிக்கு வருவதால், இங்கு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது என கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu