காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 250 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்
கொப்பரை கொள்முதல் - கோப்புப்படம்
காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு காரமடை,மேட்டுப்பாளையம், சிறுமுகை மட்டுமல்லாது பொள்ளாச்சி, நெகமம் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொப்பரை தேங்காய் கொண்டு வரப்படுகிறது.
இங்கு பருப்பு கொப்பரை தேங்காய் ரூ.108.60 - க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.118 - க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பதமானி கொண்டு கொப்பரை ஈரப்பதத்தின் அளவு ஆறுக்கும் கீழ் இருந்தால் மட்டுமே கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது. இப்பணிகளில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தர ஆய்வுப்பணியில் ராமகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில், விவசாயிகள் தங்களது பட்டா,சிட்டா அடங்கல் உள்ளிட்டவற்றை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.
தற்போது கொப்பரை தேங்காய் ரூ.108.60 க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுவரை 149 விவசாயிகளிடமிருந்து 250 டன் கொப்பரை தேங்காய் ரூ.2.71 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களுடைய இலக்கான 1000 டன் கொப்பரை தேங்காயினை விரைவில் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மெகா மார்க்கெட் வளாகத்தில் அரசுக்கு சொந்தமான 500 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள குளிர்பதன கிடங்கு உள்ளதாகவும், இந்த கிடங்கில் மஞ்சள், மிளகாய், காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்துக் கொள்ளலாம் எனவும், ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளுக்கு இந்த மையம் பேருதவியாக இருக்கும். எனவே இந்த மையத்தினை வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu