விற்பனையாகாத வீட்டுவசதி வாரிய வீடுகள்: அமைச்சர் அதிர்ச்சி தகவல்
தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி. (கோப்பு படம்).
கோவை சிங்காநல்லூர் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில், பழுதடைந்த வீடுகளை அப்புறப்படுத்தி குடியிருப்போர் சங்கங்களுடன் இணைந்து புதிய வீடுகள் கட்டும் பணியை தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து கணபதிநகர் பகுதியில் தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், கோவையில் பல இடங்களில் வீட்டு வசதி வாரிய கட்டிடங்களை ஆய்வு செய்து உள்ளோம். கோவையில் மட்டும் மூன்று இடங்களில் தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில் 196 குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக இருக்கிறது.
55 லட்சம் ரூபாய் முதல் 72 லட்சம் ரூபாய் வரை பரப்பளவை பொறுத்து விற்பனை செய்யப்பட உள்ளது. கோவை சிங்காநல்லூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 960 வீடுகள் மோசமான நிலையில் உள்ளதால் அவற்றை இடித்து அங்குள்ள குடியிருப்போர் சங்கங்களை ஒன்றிணைத்து புதிய வீடுகளை கட்டித்தர பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
சவுரிபாளையம் பகுதியில் சாலை உள்ளிட்ட சிக்கல் இருந்த நிலையில் அதுவும் விரைவில் சாதகமாகும் நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டு 3000 வீடுகள் விற்பனைக்கு தயாராக இருந்தன.
ஆனால், தற்போது வரை 1000 வீடுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. முதலில் வீடுகள் தேவையை கண்டறிய வேண்டும். ஆனால், இடம் இருந்தால் போதும் என்ற அடிப்படையில் தேவை இல்லாத இடங்களில் வீட்டு வசதி வாரியம் வீடுகளை கட்டி உள்ளனர்.
அதனால்தான் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. தற்போது ஜாயிண்ட் வெண்சர் என்ற கூட்டு முயற்சி அடிப்படையில் வீடுகள் கட்டப்படுகிறது. அரசு கட்டடங்கள் முறையான அனுமதி பெற்ற பிறகே கட்ட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.
இதேபோல் வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் வாங்கிய பல ஆயிரம் பேருக்கு பத்திரம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சில இடங்களில் பயனாளர்கள் கேட்கவில்லை. வீடு பழுது, உரிய பணம் கட்டவில்லை போன்ற காரணங்களால் தாமதமாகி உள்ளது. இருந்தபோதிலும், 11 ஆயிரம் பேருக்கு பத்திரம் வழங்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக பத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu