தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்த யூரியா உரம்
தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ரெயிலில் 1,458 டன் யூரியா உரம் வந்தது. இதை வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி ஆய்வு செய்தார். 1,458 டன் யூரியா கோவை மாவட்டத்தில் தற்போது கோடை மழை நன்கு பெய்து வருகிறது. இதையொட்டி காரிப் பருவத்திற்கான பயிர் சாகுபடி செய்வதற்கு தேவையான உரங்களை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திற்கு 597 டன், நீலகிரி மாவட்டத்திற்கு 422 டன், திருப்பூர் மாவட்டத்திற்கு 326 டன் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு 113 டன் என மொத்தம் 1,458 டன் யூரியா உரம், தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த உரம் டான்பெட் நிறுவனத்தின் மூலம் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதை கோவை வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்,
சில்லறை உர விற்பனையாளர்கள் உர கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும் படி வைத்து பராமரிக்க வேண்டும்.
உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்க கூடாது. இதுதொடர்பாக விவசாயிகள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரிடம் புகார் தெரிவிக்கலாம்.
மொத்த உர விற்பனையாளர்கள் எந்த காரணத்தை கொண்டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பவோ, பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu