சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம்: தோட்டக்கலைத்துறை

சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம்: தோட்டக்கலைத்துறை
X

சொட்டுநீர் பாசன திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமில் பேசும் தோட்டக்கலைத்துறை அதிகாரி

சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே வீரல்பட்டியில் தெற்கு ஒன்றிய தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டுநீர் பாசன திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி கூறியதாவது:

சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர் நன்கு செழித்து வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கிறது. சொட்டுநீர் பாசன முறையில் 60 முதல் 80 சதவீத நீர் பயன்பாடு திறன் அதிகரிக்கிறது. மேலும் பயிர் விளைச்சல் 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கிறது. அனைத்து விதமான காய்கறி பயிர்கள், பழங்கள், தென்னையில் ஊடுபயிராக பயிரிடப்படும் அனைத்து பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு தோட்டக்கலைத்துறை மானியம் வழங்குகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படும். மேலும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 திட்டங்களை செயல்படுத்துகிறது.

கான்கிரீட் ரிங் தொட்டி அமைத்தல், 115 கன மீட்டர் அளவு தொட்டிக்கு ரூ.40 ஆயிரம் மானியம், புதிய மோட்டார் வாங்க ரூ.15 ஆயிரம் அல்லது 50 சதவீத மானியம், நீர் ஆதாரமான கிணறு அல்லது ஆழ்துளை கிணற்றில் இருந்து பாசன நிலத்திற்கு குழாய் அமைப்பதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் மற்றும் துணை நீர் மேலாண்மை திட்ட மானியங்கள் பெற விரும்பும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல், வயல் வரைபடம், புகைப்படத்துடன் பொள்ளாச்சி தெற்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு சொட்டுநீர் பாசன மானியம் குறித்து தெரிந்து பயன்பெறலாம்.

இதுதொடர்பாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாக்கினாம்பட்டி, கோமங்கலத்திலும், 14-ம் தேதி எஸ்.பொன்னாபுரம், ஜமீன்கோட்டாம்பட்டி, கோலார்பட்டி, 15-ம் தேதி சீலக்காம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், 16-ம் தேதி சமத்தூர், சிங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என தெரிவித்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!