வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர்களுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு
தமிழக முதல்வர் ஸ்டாலின்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் பரவனாற்றிலிருந்து வரப்பெற்ற மழைநீரினால் 140 ஹெக்டர் வேளாண் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதை பார்வையிட்டு தமிழக முதல்வர் ஆய்வு செய்தார். மேலும், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளப் பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளையும் பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளுக்குட்பட்ட கூரைவீடு பகுதி சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4100/- வீதம் 41,000 ரூபாயும், முழுமையாக கூரைவீடு சேதமுற்ற ஒரு பயனாளிக்கு 5000 ரூபாயும், ஓட்டு வீடு பகுதி சேதமடைந்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,200/- வீதம் 10,400 ரூபாயும், கால்நடையை இழந்த ஒரு பயனாளிக்கு 16,000 ரூபாயும், என் மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.72,400/- மதிப்பிலான நிவாரண உதவிகளையும், வேட்டி, புடவை, 10 கிலோ அரிசி அடங்கிய நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து கனமழையினால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் வட்டம், வல்லம்படுகைக்கு சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளை பார்வையிட்டார். அப்போது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளையும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதற்கு முதல்வருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
இப்பகுதிகளில் கனமழையால் ஒரு சிமெண்ட் ஷீட் வீடு மற்றும் 2 குடிசை வீடுகள் முழுவதும் சேதமடைந்து பாதிக்கப்பட்ட 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000/- வீதம் 15,000 ரூபாய் மற்றும் பகுதியாக சேதமடைந்த 2 குடிசை வீட்டு பயனாளிகளுக்கு தலா ரூ.4,100/- வீதம் 8200 ரூபாய் நிவாரண தொகையும், வேட்டி, புடவை, 10 கிலோ அரிசி அடங்கிய நிவாரணப் பொருட்களையும், 5 பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது முதல்வர் பயிர் சேதங்கள், கால்நடை இழப்புகள், வீடுகளின் சேதங்கள் குறித்து கணக்கெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளைநிலங்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் தொற்றுநோய் ஏற்படா வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தண்ணீர், பால், உணவுப் பொருட்கள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திட வேண்டும் என்றும், பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக சீர்செய்து, சீரான மின்விநியோகம் செய்வதை உறுதி செய்திடுமாறும் முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு. உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu