சென்னை ஏர்போர்ட் யாருக்கு? காவல்துறையில் நடக்கும் பாலிட்டிக்ஸ்

சென்னை ஏர்போர்ட் யாருக்கு? காவல்துறையில் நடக்கும் பாலிட்டிக்ஸ்
X

சென்னை விமானநிலையம் ( பைல் படம்)

சென்னை` விமானநிலையம் எங்களுக்குத்தான் வேண்டும்' என்று சென்னை போலீஸ் தரப்பினரும், தாம்பரம் போலீஸ் தரப்பினரும் போர்க்கொடி தூக்குகின்றனர்.

சென்னை விமானநிலையம் யாருக்கு? என்பதில்தான் பிரச்னை வெடித்திருக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜுவாலுக்கும் தாம்பரம் கமிஷனர் ரவிக்கும் இடையேதான் இந்த பிரச்னை. தமிழக டி.ஜி.பி-யான சைலேந்திரபாபு, சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய கமிஷனர்களுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பினார்.

சென்னையில் உள்ள காவல் நிலையங்களுடன் மேலும் கூடுதலாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சில காவல் நிலையங்களைப் பிரித்து மூன்று கமிஷனர்களுக்கும் யாருக்க எந்தெந்த காவல்நிலையம்? என்று அந்தக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை போலீஸ் நிர்வாகத்தின்கீழ் 137 காவல் நிலையங்கள் ஏற்கெனவே செயல்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்து சென்னைக்கு 104 காவல் நிலையங்கள், ஆவடிக்கு 25 காவல் நிலையங்கள், தாம்பரத்துக்கு 20 காவல் நிலையங்கள் என சைலேந்திரபாபு தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் பிரச்னை என்னவென்றால், விமானநிலையத்தை சென்னை போலீஸ் லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறார் டி.ஜி.பி. இது மீடியாக்களுக்கும் தகவல் போனது. இதைப் பார்த்த தாம்பரம் ஏரியாவில் வரும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொதித்துவிட்டார் `` டி.ஜி.பி-யின் கடிதம் தற்காலிகமானது. இது முடிவானது அல்ல.

தமிழக அரசின் உள்துறையை கவனிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி-யின் பரிந்துரை லிஸ்ட்டைப் பார்த்து மேலும் சில திருத்தம் செய்வார். அதன் பிறகு, அரசு ஆணை வெளியாகும். அதுதான் இறுதியானது. அதில் சென்னை விமானநிலையம் யாருக்கு? என்று குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம் '' என்கிறார்.

சென்னை`விமானநிலையம் எங்களுக்குத்தான் வேண்டும்' என்று சென்னை போலீஸ் தரப்பினரும், தாம்பரம் போலீஸ் தரப்பினரும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். சர்வதேச அளவில் பிரபலமான விமானநிலையம், வெளிநாட்டில் இருந்தும், டெல்லியில் இருந்தும் தினப்படி பல்வேறு வி.வி.ஐ.பி-கள் வந்துபோகிற இடம். தமிழக முதல்வர், கவர்னர் என்று அனைவரும் அடிக்கடி வந்து போவதால், இந்த விமானநிலையத்தை உள்ளடக்கிய போலீஸ் கமிஷனருக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு.

முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் புறநகர் கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு அதன் கீழ் விமானநிலையம் கொண்டுவரப்பட்டது. பிறகு அது பிரிக்கப்பட்டது வேறு விஷயம். தற்போது மீண்டும் யாருக்கு விமானநிலையம் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, `` சென்னை விமானநிலையம் என்றால் சென்னை போலீஸ் நிர்வாகத்தின் கீழ்தானே வரவேண்டும்? இதுநாள் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை நன்றாக கவனித்து வருகிறோம். அதை விட்டுவிட நாங்கள் தயாராகயில்லை '' என்கிறார்.

தாம்பரம் போலீஸ் அதிகாரி கூறும்போது, ``விமான நிலையத்தில் ஏதாவது எமர்ஜென்சி என்றால் சென்னை கமிஷனர் அலுவலகம் வேப்பேரியில் இருக்கிறது. அங்கிருந்து திரிசூலத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வரவேண்டும் என்றால், எவ்வளவு தூரம்? பிஸியான டிராபிக்கில் கமிஷனர் கார் சிக்கினால் எப்படி குறித்த நேரத்துக்கு விமானநிலையத்துக்கு வரமுடியும்? அதுவே,

தாம்பரம் கமிஷனர் என்றால், விரைவாக வந்து விடலாம். உதாரணத்துக்கு, ஹைதராபாத் விமான நிலையத்தை நிர்வாகிப்பது ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அல்ல! சைபராபாத் கமிஷனர்தான் கவனிக்கிறார். அதுமாதிரி, சென்னை விமானநிலையத்தைத் தாம்பரம் போலீஸ் நிர்வாகிப்பதுதான் சரி '' என்கிறார்.

டி.ஜி.பி சைலேந்திரபாபு;

இதற்கிடையில், தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பியான சைலேந்திரபாபு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தனது விருப்பமாக விமான நிலையம், சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருக்கவேண்டும் என்கிற கருத்தை வெளிப்படுத்தினாராம். அவர் அப்படிப் பேசியதைத் தாம்பரம் தரப்பு அதிகாரிகள் ரசிக்கவில்லை.

தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறைச்செயலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``எல்லை பிரிப்பது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அவரவர் யூகங்களை வெளியே பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராத புதிய முடிவை எங்கள் செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ். அறிவிப்பார். பொறுத்திருந்து பாருங்கள் '' என்று சஸ்பென்ஸ் வைத்து சொல்கிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!