தொற்று 500க்கு கீழ் கொண்டுவர பொதுமக்கள் ஒத்துழைக்கணும் - சுகாதாரத்துறை செயலாளர்
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கான 15 படுக்கைகளுடன் கூடிய கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், 34 மாவட்டங்களில் 100 க்கு கீழ் தொற்று பதிவாகிறது. 4 மாவட்டங்களில் 100 க்கு மேல் பதிவாகிறது. கூட்டத்தை தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது போன்ற சொன்னால் கூட சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகமாகிறது. இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் தொடர்ச்சியாக ஒரு நாள் ஏற்படும் தொற்று எண்ணிக்கை 2000 நெருங்குவது வருத்தம் அளிக்கிறது.
சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் 300 பேர் கூடி கூட்டம் நடத்தி அதில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த கூட்டத்தில் பலர் தடுப்பூசி போடவில்லை. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும், கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் கவனமாக இருக்க வேண்டும். 38% தான் முகக்கவசம் அணிகிறார்கள். அனைத்து மத ஆலயங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. தடுப்பூசி குறைவாக போட்டுக்கொண்ட இடங்களை கண்டறிந்து அங்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும்.
எந்த விதமான கூட்டங்களிலும் தடுப்பூசி போடாமல், கோவிட் தொற்று தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் கிளஸ்டர் உருவாகும். கீழ்ப்பாக்கம் பகுதியில் கிளஸ்டர் உருவாகி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கூட்டம் சேராமல் தனிமையில் கொண்டாட வேண்டும். கொரோனா தொற்று எண்ணிக்கை 500க்கு கீழ் கொண்டு வர பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஈரோடு, கோவையில் காரமடை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் கோவிட் தொற்று அதிகமாக உள்ளது. அந்த இடங்களில் தடுப்பூசிகள் போடுவதை அதிகப்படுத்த அறிவுறுதியுள்ளோம். கீழ்ப்பாக்கம் பகுதி ஒரு எடுத்துக்காட்டு தான். அது போன்று நிறைய இடங்களில் நடக்கிறது. மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கோவிட் தொற்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். PPE கிட், கிளவுஸ் போன்றவற்றை எப்போதும் போட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu