அதிமுக-பாஜக கூட்டணியில் மாறுபட்ட கருத்துகள் ஏதும் இல்லை: டி.ஜெயக்குமார்

அதிமுக-பாஜக கூட்டணியில் மாறுபட்ட கருத்துகள் ஏதும் இல்லை: டி.ஜெயக்குமார்
X

அதிமுக சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் எவ்வித மாறுபட்ட கருத்துக்களும் இல்லை

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் எவ்வித மாறுபட்ட கருத்துக்களும் இல்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் தெரிவித்தார்.

தமிழக அரசு பால் விலை, வீட்டு வரி, மின்கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவைகளை அண்மையில் உயர்த்தியதைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை வண்ணாரப்பேட்டை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி ஜெயக்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: ஓ.பி.எஸ் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பது அதிமுகவுக்கு தொடர்பில்லாதது. இதில் உண்மையான அதிமுகவினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிமுகவிற்கும் ஓபிஎஸ்-க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இக்கூட்டத்தில் மூத்த தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. கட்சி நிர்வாகிகளில் சுமார் 95- சதவீதத்திற்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ராமச்சந்திரன் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து இருப்பது சரியல்ல. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதுதான் இதற்கு பதிலாக அமையும்.

பா.ஜ.க கூட்டணியில் மாற்றம் இல்லை:

அதிமுக,பாஜக கூட்டணி குறித்து எவ்வித மாறுபட்ட கருத்துக்களும் இல்லை. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நான் தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உரிய விளக்கங்களை அளித்து விட்டார். உண்மையான தோழமை உணர்வோடு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சிதான் பாஜக என்பதில் ?எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை என்றைக்கும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக விரிவான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

துறைமுகத்தில்...

அதிமுக வடசென்னை (தெற்கு) மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் என்.பாலகங்கா தலைமையில் வால்டாக்ஸ் சாலை, சூளை உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராயபுரம் ஆர்.மனோ, கட்சி நிர்வாகிகள் அருள்வேல், கண்ணன், இம்தியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்.கே.நகரில்...

அதிமுக வடசென்னை (வடகிழக்கு) மாவட்டம் சார்பில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று விலை உயர்வு, கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பகுதி செயலாளர்கள் எம்.என். சீனிவாச பாலாஜி, ஆர்.நித்தியானந்தம், கட்சி நிர்வாகிகள் மதுரைவீரன், சேவியர், கணேசன், சசிரேகா, ஜனார்த்தனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil