நுகர்பொருள் வினியோக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்
நுகர்பொருள் வினியோக அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் அலுவலக வாசலில் மாற்றுத்திறனாளிகள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நுகர்பொருள் வாங்கச் செல்லும் கடைகளில் மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதாகவும், கைரேகை பதிவு இல்லை என பொருட்கள் வழங்க மறுப்பதாகவும், நுகர்பொருள் வழங்கும் கடைகள் மற்றும் உணவு வழங்கல் துறை அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனக்கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாற்றுத்திறனாளி சரவணன் கூறும்போது
தமிழ்நாடு நுகர்வோர் கழகத்தில் கைரேகை பதிவு இல்லை என மாற்றுத்திறனாளிகளுக்கு பொருட்கள் மறுக்கப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இருந்தும் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நின்று தான் வரவேண்டும் என கூறுகின்றனர். மேலும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல திட்டங்களை அறிவித்தாலும் அது சரிவர மாற்றுத்திறனாளிகளை சென்றடைவதில்லை.
தற்போது இந்த அலுவலகத்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான எந்த வசதியும் இங்கு செய்யப்படவில்லை. மேலும் பெண் மாற்றுத்திறனாளிகள் எந்த அரசு அலுவலகங்களுக்கும் சென்று வரக்கூடிய சூழ்நிலை தற்போது இல்லாமல் இருந்து வருகிறது. பல இடங்களில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாகவும் இழிவாகவும் பேசி வருகின்றனர். அரசு அதிகாரிகளும் மாற்றுத்திறனாளிகளை அலட்சியமாகவே பேசுகின்றனர்.
இந்த மாற்றுத்திறனாளிகள் துறை தமிழக முதல்வரின் கையில் இருந்தும், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை மேலும் நுகர்வோர் பொருட்கள் வாங்கும் கடைகளில் மாற்றுத்திறனாளிகளை எவ்வாறு வழிநடத்த வேண்டுமென நுகர்வோர் துறையில் வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டு இருப்பதாகவும், அந்த வழிகாட்டு நெறிமுறைகளை எங்களுக்கு காட்டுமாறு கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றார்.
மாற்று திறனாளிகள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் காலை முதல் உணவு பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பொது மக்களுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் போலீசார் விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவெற்றியூர் உணவு வழங்கல் துறை அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu