தனியார்‌ ஆம்புலன்ஸ்களின் அதிக கட்டண வசூலிப்பை முறைப்படுத்துங்கள்

தனியார்‌ ஆம்புலன்ஸ்களின் அதிக கட்டண வசூலிப்பை முறைப்படுத்துங்கள்
X
- தமிழக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்

தமிழகத்தில் அதிக கட்டணம்‌ வசூலிக்கும்‌ தனியார்‌ ஆம்புலன்ஸ்களை முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார்‌ ஆம்புலன்ஸ்களில்‌ 3 மடங்கு அதிக கட்டணம்‌ வகூலிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது கண்டிக்கத்தக்கது. சென்னை மாநகரில்‌ மீனம்பாக்கம்‌ முதல்‌ ராஜீவ்‌ காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கான சுமார்‌ 15 கி.மீ தொலைவிற்கு சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு ரூ. 6,500 வரையும்‌, ஆக்சிஜன்‌ வசதியுடன்‌ கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு ரூ.9000 வரையும்‌ கட்டணம்‌ வசூலிக்கப்படுவதாக செய்திகள்‌ வெளியாகியுள்ளன.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு, கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும்‌ ஏழை மக்களின்‌ சூழ்நிலையினை சாதகமாக்கி கட்டணக்‌ கொள்ளையில்‌ ஈடுபடும்‌ தனியார்‌ ஆம்புலன்ஸ்‌ உரிமையாளர்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்‌, தமிழகம்‌ முழுவதும்‌ அரசு நிர்ணயித்த கட்டணம்‌ மட்டுமே வசூலிக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்‌ எனவும்‌ தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்‌.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!