ரூ.2000 நிவாரணநிதி 10-ம் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் வரும்10-ம் தேதி முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக கரோனா நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் சென்னையில் வரும் 10-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் டோக்கன்கள் வழங்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்களால் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும். இதன்படி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு திங்கட்கிழமை முதல் ரூ. 2,000 வழங்கப்படும். அரிசி அட்டை வைத்துள்ள சுமார் 2.07 கோடி பேருக்கு இந்தத் திட்டம் அமலுக்கு வரும். இதற்கான டோக்கன்கள் ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும். அட்டைதாரரின் குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் ரேஷன் கடைக்குச் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.தினந்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்தப் பணம் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 200 அட்டைதாரர்களுக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. முதலிலேயே வழங்கப்படும் டோக்கனில் பணத்தைச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.
அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் முறையாகச் சென்று சேரும். அதைக் கண்காணிக்கும் முழுப் பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கெனத் துணை வட்டாட்சியர், பிடிஓ தலைமையில் தனிக் குழுவும் விரைவில் அமைக்கப்படும்''. என அமைச்சர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu