ஆவினில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் -பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை: ஆவினில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசுக்கு அவர் வைத்த கோரிக்கை பின்வருமாறு,
மதுரை ஆவினில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் எனும் போர்வையில் கடந்த காலங்களில் அதிமுகவினர் செய்த அதே தவறையே திமுகவினர் தொடர்வதும், கடந்த காலத்தில் பெண் ஊழியர்களுக்கு நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலையே தற்போது தொடர்வதும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத சூழநிலைகளே தொடர் கதையாகி வருவதும், அதனை தடுத்து நிறுத்த வேண்டிய ஆவின் தலைமை நிர்வாகம் ஊழல் கரைபடிந்து போய் தவறிழைக்கும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சாதகமாக துணை போவதும் வேதனையளிக்கிறது.
"தாய்ப்பாலுக்கு நிகரான பால் ஆவின் பால்" என விளம்பரங்கள் மட்டும் செய்து விட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் பண்ணைகள், அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இன்னும் தொடர காரணமாக இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனியாவது தமிழகம் முழுவதும் ஆவினில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சாட்டையை சுழற்றி நேர்மையான அதிகாரிகளை கொண்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் கொடாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஆவினில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய "விசாகா கமிட்டி"யை செயல்படுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி ஆவினில் தமிழகம் முழுவதும் ஊழலில் ஊறித் திளைத்து, பெண் ஊழியர்களிடம் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu