புழலில் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டம்
புழலில் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டம் நடத்திய நிலையில், விசாரணை நடத்திய போலீசார்.
புழலில் வீட்டின் ஒப்பந்தத்தொகை மீட்டு தரக்கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி,புழல் ரெட்டி தெருவில் வசித்து வருபவர் மாலதி இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வீடு இழந்த இவர் கைக்குழந்தையுடன் சார்லஸ் என்பவரை தொடர்பு கொண்டு தனக்கு வீடு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து சார்லஸ் மார்க் என்பவரை அறிமுகப்படுத்தி அவர் மூலமாக நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு அறிஞர் அண்ணா நகர் பகுதியில் உள்ள மார்க்கின் அடுக்குமாடி இரண்டாவது தலத்தில் உள்ள வீட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் சென்றுள்ளார். நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் பெற்றுக் கொண்ட மார்க் மாலதிக்கு வீடு ஒப்பந்தம் அளித்துள்ளார்.
இந்நிலையில் மார்க் வங்கியில் கடன் வாங்கி உள்ளதாக வங்கி அதிகாரிகள் மாலதி குடியிருக்கும் வீட்டிற்கு வந்து கூறியுள்ளனர்.உடனடியாக சார்லஸ்சை தொடர்பு கொண்ட மாலதி வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் வந்துள்ளதை கூறியுள்ளனர்.இதனை அடுத்து சார்லஸ் அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு வருடம் கழித்து ஒப்பந்தத்தை நீடித்து கொள்வதாக கூறியுள்ளார்.அதேபோல் ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் நீடித்துள்ளார். இந்நிலையில் வங்கி ஊழியர்கள் அதிகாரிகளுடன் வந்து வீட்டில் உள்ள பொருட்களை வெளியில் வைத்து பின்னர் வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட மாலதி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட புழல் சரக போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட தனக்கு இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. புழல் போலீசார் மீது அதிருப்தி கொண்ட மாலதி தனது மூன்று குழந்தைகளுடன் இன்று காலை முதல் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த புழல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா சிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத மாலதி சுமார் 4 மணி நேரமாக தர்ணா போராட்டத்தை நீடித்தார்.
மேலும் தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாலதி தனது தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாகவும். மேலும் தனக்கு தகுந்த நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்த போராட்டத்தை மீண்டும் கையில் எடுப்பேன் என்று அவர் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu