சென்னை புழல் சிறையில் பெண் சிறைவாசிகளுக்கு தொழில் பயிற்சி சான்றிதழ்

சென்னை புழல் சிறையில் பெண் சிறைவாசிகளுக்கு தொழில் பயிற்சி சான்றிதழ்
X

சென்னை புழல் சிறை (கோப்பு படம்)

சென்னை புழல் சிறையில் பெண் சிறைவாசிகளுக்கு தொழில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

புழல் மகளிர் சிறையில் பெண்கள் சுயமாக வாழும் வகையில் தொழிற்பயிற்சி முடித்த 31 பெண் சிறைவாசிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் சிறைவாசிகள் சுயமாக வாழும் வகையில் பல்வேறு சுய தொழில் செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. விஜயகீதம் பௌன்டேஷன் என்ற தனியார் அமைப்பு மூலம் வயர் நாற்காலி, கட்டில் பின்னுதல், வயர் கூடை பின்னுதல், மெழுகுவர்த்தி செய்தல், மிதியடி செய்தல் என பல்வேறு வகையிலான பயிற்சிகள் கடந்த 1மாதமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு மாத கால பயிற்சி முடித்த 31 பெண் சிறைவாசிகளுக்கு நேற்று சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பேசிய சிறைத்துறை இயக்குநர் அம்ரேஷ் புஜாரி சிறைச்சாலை என்பது கல்லூரி போன்றது எனவும், கல்லூரியில் கல்வி பயின்று பட்டம் பெறுவது போல, சிறையில் சுய தொழில் செய்வதற்கான பயிற்சியை பெற்று சிறையில் இருந்து வெளியே சென்றதும் வேலை வாய்ப்பு பெற்று சுயமாக வருவாய் ஈட்ட உதவும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை சரக டி.ஐ.ஜி. முருகேசன், தலைமையிட டி.ஐ.ஜி. கனகராஜ், சிறுகுறு தொழில் இணை இயக்குநர் கடே ரவி, உதவி இயக்குநர் ரைம்சைன் வில்சன், மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரேன், கிருஷ்ணராஜ், விஜயகீதம்பௌன்டேஷன் நிறுவனர் - பேராசிரியர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story