புழல் அருகே கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை திருடிய நபர் கைது

புழல் அருகே கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை திருடிய நபர் கைது
X

திருட்டு நடந்த கோவில் மற்றும் திருடி பிடிபட்ட நபர். 

புழல் அருகே, கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்து 4 சவரன் தாலியை திருடிச் சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.

புழல் அருகே கோவிலில் சாமி கும்பிட வந்த நபர், அம்மன் கழுத்தில் இருந்து 4சவரன் தாலியை திருடி சென்றார். பட்டப்பகலில் அம்மன் கழுத்தில் இருந்து நகையை திருடிய நபரை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரில், அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பூசாரி கடந்த 3ம் தேதி காலை, வழக்கம் போல பூஜைகளை செய்து விட்டு பூசாரி, காலை உணவு உண்பதற்காக சென்றுள்ளார். மீண்டும் கோவிலுக்குள் வந்து பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த 4சவரன் தாலிச் சங்கிலி திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, அங்கு நேரில் வந்து விசாரணை நடத்திய போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கோவிலில் வந்து சாமி கும்பிடுவது போல, அக்கம் பக்கம் நோட்டமிட்டு யாருமில்லாத நேரத்தில் கருவறைக்குள் சென்று, அம்மன் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை திருடி செல்கிறார். இந்த காட்சிகளின் அடிப்படையில் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அம்மன் கழுத்தில் இருந்து தங்க தாலியை திருடி சென்ற நபரை கைது செய்தனர்.

விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த லிங்கமூர்த்தி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து புழல் போலீசார் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கோவிலில் துணிகரமாக வந்து அம்மன் கழுத்தில் இருந்து நகையை திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story