தனியார் ஏடிஎம், ஹோட்டலில் திடீர் தீ விபத்து
புழலில் அதிகாலை ஹோட்டல் மற்றும் ஏடிஎம்-மில் நடந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் எரிந்து சேதமடைந்தன
புழலில் அருகருகே உள்ள தனியார் ஏடிஎம், ஹோட்டலில் அதிகாலை நேரத்தில் திடீர் தீ விபத்து. ஏடிஎம் இயந்திரம் எரிந்து நாசம். பல லட்ச ரூபாய் எரிந்திருக்கலாம் என அச்சம். வங்கி அதிகாரிகள் ஆய்விற்கு பிறகே பணத்தின் மதிப்பு தெரிய வரும்.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புழலில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டலும், அதன் அருகே தனியார் ஏடிஎம் இயங்கி வருகின்றன. நேற்றிரவு ஹோட்டலில் வியாபாரத்தை முடித்து விட்டு பூட்டிவிட்டு சென்றனர். இன்று அதிகாலை தனியார் ஏடிஎம், ஹோட்டல் இரண்டும் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பேரில் செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரம், ஹோட்டலில் இருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாயின. ஏடிஎம் மையத்தில் இயந்திரம் முற்றிலும் எரிந்த நிலையில் பல லட்ச ரூபாய் எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே இயந்திரத்தில் இருந்து தீயில் கருகிய பணத்தின் மதிப்பு தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனியார் ஏடிஎம் மையத்தில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி ஏடிஎம் மையத்தில் பற்றிய தீ அருகில் இருந்த ஹோட்டலுக்கு பரவியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிருஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu