வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
புழலில் சட்டத்துக்கு புறம்பாக ஆழ்துளை கிணறு அமைக்க முற்பட்ட வண்ண மீன் ஏற்றுமதி நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புழலில் தனியாருக்கு சொந்தமான வண்ண மீன்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் மீன்களை வளர்த்து அவைகளை பராமரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வண்ண மீன்கள் பராமரிப்பதற்காக பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக ஏற்கனவே நான்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளதனர். இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் பலமுறை எதிர்த்தும் கண்டு கொள்ளாததால் தங்கள் வீட்டில் உள்ள ஆழ் துளை கிணறுகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டதாகவும் இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலமுறை இந்த நிறுவனத்திடம் ஆழ்துளை கிணறுகளை மூட கூறி உள்ளனர்.
ஆனால் இந்த நிறுவனம் மீண்டும் ஆழ்துளை கிணறுகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று நள்ளிரவு ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திர வாகனத்தை கொண்டு வந்த பொழுது அதனை கண்ட பொதுமக்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என போலீசார் கூறி ஆழ்துளை கிணறு அமைக்க வந்த இயந்திரத்தை திருப்பி அனுப்பினர்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu