கோயம்பேடு பேருந்து நிலைய வாசலில் போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
பைல் படம்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் பேருந்து நிலையத்தின் உள்ளே இடங்களில் தூங்குவது வழக்கம்.பேருந்து நிலையத்தில் தூங்கிவிட்டு காலையில் அங்கிருந்து கிளம்பி பணிக்கு சென்று மீண்டும் இரவில் வந்து தினசரி தங்கி உள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், பொதுமக்கள் மீது போலீசார் திடீரென அங்கு தூங்க கூடாது என தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென கோயம்பேடு பேருந்து நிலையம் முகப்பு வாசலில் அமர்ந்து போலீசாரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு உள்ளே பேருந்துகள் செல்ல முடியாமல் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த உயர் அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசாரின் தாக்குதலை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாரின் நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் பாதிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் பேருந்து நிலையத்தின் உள்ளே படுக்க அனுமதிக்கப்பட்டதால் அங்கிருந்து கலைந்து சென்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றவர்களை போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி தாக்கிய சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் ஆதரவற்ற பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu