புழல் சிறை வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சிறை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.
சென்னை புழல் சிறை வளாகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை புழல் சிறையானது குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உரிய தண்டனை பெற்றுக் கொடுத்து அவற்றினை நடைமுறைப்படுத்தும் செயலினை செய்து வரும் துறையாகும்.புழல் சிறையில் தண்டனை குற்றவாளிகள் விசாரணை கைதிகள் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் என சுமார் 10,000 க்கும் மேற்பட்ட சிறைவாசிகளை புழல் சிறை நிர்வாகம் கையாண்டு வருகிறது. இந்த நிலையில் விசாரணை கைதிகள் மட்டும் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப அன்றாடம் அவரது வழக்கறிஞர்கள் அவர்களை சந்தித்து உரையாடி அவர்களுக்கு நீதிமன்றப்பிணையினை பெற்று தரும் பணியில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விசாரணை கைதிகள் குற்றத்தின் தன்மை குறித்தும் அந்த குற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ளவும் வழக்கறிஞர்கள் புழல் சிறை வளாகத்தில் விசாரணை கைதிகளை சந்திப்பது வழக்கம்.
அந்த வகையில் பல்வேறு வழக்கறிஞர்கள் விசாரணை கைதிகளை சந்திக்க தங்களது அடையாள அட்டைகளை கொண்டு சிறைவாசிகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கறிஞர்களை சிறைத்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை சந்திக்க தடை ஏற்படுத்துவதாகவும் உரிய அனுமதி பெற்று வந்தாலும் அவர்களை சந்திக்க காலதாமதம் செய்வதாகவும், மேலும் வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை சிறை வளாகத்தில் கொடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
அவ்வாறு சிறை கைதிகள் உள்ளே இருந்தாலும் சிறைத்துறை காவலர்கள் சம்பந்தப்பட்ட கைதிகளை வழக்கறிஞர்கள் முன்பாக கூட்டி வருவதில்லை, பல்வேறு குற்றச்சாட்டுகள் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த செயல்களை கண்டிக்கும் விதமாக சென்னை புழல் சிறை வளாகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்படைந்த புழல் சிறை துறை காவலர்கள் மற்றும் புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனி இதுபோன்று காலதாமதம் ஏற்படாது என உறுதி அளித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் வழக்கறிஞர்கள் சிறைவாசிகளை வழக்கறிஞர்கள் சந்திக்கும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும்,
புதிது புதிதாக சட்டத்திருத்தங்கள் கொண்டு வருவதால் வழக்கறிஞர் தொழில் பாதிக்கப்படுவதாகவும் மேலும் வழக்கறிஞர்களின் காலநேரம் வீணாவதாகவும் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பழைய நடைமுறையை சிறைத்துறை அமல்படுத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளிடம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி நல்லதொரு முடிவை தெரிவிப்பதாக சிறைத் துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததின் பேரில் தற்காலிக போராட்டமானது கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu