வட மாநில இளைஞர்களிடம் இந்தியில் பேசி குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், வடமாநில தொழிலாளர்களிடம் இந்தியில் பேசி குறைகளை கேட்டறிந்தார்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் வடமாநில தொழிலாளர்கள் பணி புரியும் ஆச்சி மசாலா நிறுவனத்தில் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வடமாநில தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர்களிடையே இந்தியில் பேசி, அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், போதிய வசதிகள் உள்ளனவா என்றும் இந்தியில் பேசி கேட்டறிந்தார். அப்போது பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், செங்குன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொழிற்சாலை உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகர காவல் இணை ஆணையர் விஜயகுமார், செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன் ஆகியோர் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து கேட்டறிந்தனர்.
தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களுக்கான பிரச்சினைகள் குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் அதுகுறித்து உடனே காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் நிலவும் அச்சத்தை தவிர்ப்பதற்காக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
காவல்துறை சார்பில் உதவி எண்களும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டு அறைகளும் இயங்கி வருகின்றன. மேலும் வடமாநில தொழிலாளர்களிடம் நேரடியாக பேசிய போது வதந்தி வீடியோக்களை நம்பவில்லை எனவும், தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் ஹிந்தி சரளமாக பேசக்கூடிய சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு இந்த விவகாரம் கையாளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஆவடி ஆணையரக இணை ஆணையர் விஜயகுமார், தமிழ்நாட்டில் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498101300 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
மேலும் பிற மாநில தொழிலாளர்கள் ஆவணங்கள் குறித்து தொழிலாளர்கள் நலத்துறை இணையதளத்தில் பதிவிடப்படுவதாகவும், காவல் துறைக்கு தேவைப்படும் பட்சத்தில் அந்த விவரங்கள் எடுத்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu