துப்பாக்கி காட்டி மிரட்டிய அ.தி.மு.க. நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்கு
அ.தி.மு.க. நிர்வாகி சீனிவாசன்.
செங்குன்றம் அருகே பண மோசடி செய்து துப்பாக்கி காட்டி மிரட்டிய புகாரில் அ.தி.மு.க. நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரை சேர்ந்தவர் நெல்சன் (70). பள்ளி தலைமை ஆசிரியரான இவர் ஓய்வு பெற்று கடந்த 10ஆண்டுகளாக செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்டவற்றை சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எம்.ஜி. சீனிவாசன் என்பவருக்கு ப்ளூ மெட்டல்ஸ் எனப்படும் ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை சப்ளை செய்து வந்துள்ளார். கடந்த 7ஆண்டுகளுக்கு முன் சீனிவாசன் 7.5லட்சம் ரூபாய் பாக்கி வைத்துவிட்டு அதனை தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 7ஆம் தேதி பாடியநல்லூர் அங்காளஈஸ்வரி கோவிலின் மைதானம் அருகே நெல்சன் நடந்து சென்ற போது எதிரே வந்த அ.தி.மு.க. நிர்வாகி சீனிவாசனிடம் தமக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அ.தி.மு.க. நிர்வாகியான சீனிவாசன் நெல்சனை அவதூறாக பேசி தன்னுடைய இடுப்பில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நெல்சன் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தமக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி, தகாத வார்த்தைகள் பேசி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற அ.தி.மு.க. நிர்வாகி சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் ஆயுதம் வைத்திருத்தல், கொலை முயற்சி மோசடி உள்ளிட்ட 6பிரிவுகளில் அ.தி.மு.க. நிர்வாகி எஸ்.எம்.ஜி. சீனிவாசன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தொழிலதிபர் ஒருவருக்கு தர வேண்டிய 20கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி எஸ்.எம்.ஜி.சீனிவாசன், அவரது கூட்டாளி பா.ஜ.க. பிரமுகர் கே.ஆர்.வெங்கடேசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu