ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் 14வது விளையாட்டு விழா

செங்குன்றத்தில் உள்ள ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில், 14வது விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருவள்ளூர், செங்குன்றத்தில் அமைந்துள்ள ஆர்.பி.கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் 14வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி நிர்வாகி நீதியரசர் வெங்கடராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மகாலட்சுமி, கல்லூரி துணை முதல்வர் கீதா ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவிகளின் அணிவகுப்பும், ஜான்சிராணி, பி.டி. உஷா, பி.வி.சித்து, மேரி கோம் என்ற நான்கு அணிகளும் சிறப்பாக அணிவகுத்து நின்று சிறப்பு விருந்தினருக்கு மரியாதை செய்தனர். மாணவியர் விளையாட்டுக் குழுத் தலைவி கீர்த்திகாவிடமிருந்து ஒலிம்பிக் தீபத்தினை, சரளா பெற்று பின்னர் நான்கு அணிகளின் தலைவிகளும் துணைத் தலைவிகளும் அத்தீபத்தினை ஏந்தி வந்து அளித்திட, இறுதியாக விளையாட்டுக் குழு துணைத் தலைவி சக்தியுடன் கூடுதல் துணைத் தலைவி ஆமினா சித்திகா இணைந்து ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றினார்கள்.
கல்லூரி நிர்வாகி நீதியரசர் வெங்கடராமன் பேசுகையில், இன்றைய மாணவிகள் லட்சியத்தடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ அறிவுரைகளை எடுத்துக் கூறி வாழ்த்தினார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும், கல்லூரி அலுவலகப் பணியாளர்களுக்கும் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.
கல்லூரி மாணவிகள் கராத்தே, டிரில், யோகா, ஆரோபிக்ஸ், சிலம்பம், இந்தியா பார்மேஷன் என பல கலை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினர். பி.காம் ஜெனரல் மூன்றாமாண்டு மாணவிகள் திவ்ய தர்ஷினி, சுவேதா, பி.எஸ்சி., இரண்டாமாண்டு மாணவி யுவஸ்ரீ தொகுப்புரையாற்றினர். ஆமினா சித்திக்கா நன்றி கூறினார்.
விளையாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தி, ஜெயலஷ்மி பேராசிரியர்களுடன் அக்குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu