6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் ஆலோசனை
பள்ளிகளில் தூய்மை பணி, ( பைல் படம்)
தமிழகத்தில் ஊரடங்கு வருகிற செப். 15ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்தக்கட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
செப்.1ம் தேதி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் மற்றும், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகளை அளிப்பதா அல்லது கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா என்பது குறித்தும் சுகாதாரத் துறை நிபுணா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தொடா்ச்சியாக அதிகரித்தது. நோய்த் தொற்றால் பாதித்தவா்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36 ஆயிரத்தைக் கடந்தது.
நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னா் பொது மக்களின் நலன் கருதி தொடர்ந்து படிப்படியான தளா்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,
அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயா் அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அது தொடா்பாகவும்,
மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடா்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu