கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: கோர்ட் அதிரடி
இந்தியாவில் 1975 ஆண்டு முதல் 1977 ஆண்டு வரையிலான நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில், மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன. வனம், நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியன, மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் சார்பாக, 'அறம் செய்ய விரும்பு' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ''மாநில அரசு பட்டியலில் இருந்து கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது. கல்வி, சம்பந்தமாக சட்டங்கள் நிறைவேற்றும் மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.என்று கூறப்பட்டிருந்தது.
இந்தமனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் தலைமையிலான அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பில் திருத்தம் கொண்டு வர முடியாது. அரசியல் சட்ட நிர்ணய சபையில் இதுசம்பந்தமாக கொண்டு வரப்பட்ட திருத்தம் நிராகரிக்கப்பட்டது.
கல்வி மாநில பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டதால்தான், நீட் போன்ற பிரச்னைகள் உருவாகி மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ளவர்களுக்கு தேவை என்ன என்பதை மாநில அரசால்தான் முடியும்'' என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான கூட்டாட்சி முறையாக இருக்கும். மாநிலங்களுக்கு ராணுவம், அன்னிய விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கருத்து தெரிவித்தார். இந்த வழக்கில் தமிழக அரசை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், மனுவுக்கு 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu