வன விலங்குகளால் ஏற்படும் பயிர்- சொத்துகள் சேதத்துக்கு நிவாரணம் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு
தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்.
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் சொத்துக்களுக்கு நிவாரணம் வழங்க ரூபாய். 6.42 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை உயர் அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார் .
சென்னை, பொதிகை வளாகத்தில் உள்ள வனத்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில், இன்று வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் வன விலங்கு மனித மோதல்கள் தடுப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பசுமைத் தமிழகத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரித்து, வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளால் விவசாயிகள் இழப்பு தடுத்தல் உடனடியாக நிவாரணம் வழங்குவது குறித்தும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை அமைச்சர் கூறினார்.
கூட்ட த்தில், வனத்துறை அமைச்சர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க வனத்துறை மூலம் பொதுமக்களுக்கும் வன மேம்பாட்டுப் பணிகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவது குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரித்து வன விலங்குகள் பாதுகாப்பு உறுதி செய்வதுடன், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் சொத்துக்கள் பாதிப்பிற்கு நடப்பாண்டில் ரூ. 6 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் அரசின் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது .இதன் மூலம் 2901 பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். மேலும், வரும் காலங்களில் உடனுக்குடன் நிவாரணம் வழங்க ரூபாய்.10 கோடி நிதி விரைவில் ஒதுக்கீடு வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் காப்பகம், யானைகள் வழித்தடத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய, மாநில அரசு நிதி கோரப்பட்டுள்ளது. வன விலங்குகள் மனித மோதல் தடுத்திடவும், யானை புகா அகழிகள் அமைத்தல், சூரிய சக்தி மின் வேலிகள், தொங்கும் வேலிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் நியமனம், மோப்ப நாய் பயன்பாடு நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இக்கூட்டத்தில் வனத்துறை முதன்மை தலைமை வன விலங்குகள் காப்பாளர் சேகர்குமார் நீரஜ், சென்னை வன உயிரின காப்பாளர் ஈ.பிரசாந்த் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu