பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்த வழக்கு சசிகலா பதில் மனு தாக்கல்
சசிகலா பைல் படம்
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, 2017ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சென்னை 4வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு சசிகலா தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகவும், கட்சியின் மற்ற விவகாரங்களில் தலையிட முடியாது எனத் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
மேலும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறிய சசிகலா, தனது வழக்கை நிராகரிக்கக் கோரி, அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் இருந்து தினகரன் விலகியுள்ளதால், சசிகலா தரப்பில் திருத்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என, அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை பதில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், சசிகலாவின் திருத்த மனு விசாரணைக்கே உகந்ததல்ல எனவும், விசாரணையைக் காலம் தாழ்த்த வேண்டுமென்ற நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், சசிகலாவின் திருத்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கட்சியின் நிதி விவாகரங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாலும், வங்கிகளை எதிர்மனுதாரராக சசிகலா இணைத்துள்ளதாலும், வங்கித் தரப்பை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட உரிமையியல் நீதிமன்றம், விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu