செப்டம்பர் 1 ம் தேதிக்குள் 100 விழுக்காடு ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்

செப்டம்பர் 1 ம் தேதிக்குள் 100 விழுக்காடு ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்
X

அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

செப். 1 -க்குள் 100 விழுக்காடு ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பள்ளிக்கூட பணியாளர்கள் , ஆசிரியர்களின் குடும்பத்தாருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கியது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபெற்றனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்வரின் அறிவுறுத்தல்படி செப்டம்பர் 1 முதல் , 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர், ஆசிரியர்களின் குடும்பத்தார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் ஆசிரியர் அல்லாத பள்ளிக்கூட பணியாளர்கள் 89.32 சதவீதம் பேருக்கும், ஆசிரியர்களுக்கு 90.11 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 ம் தேதிக்குள் 100 சதவீத ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலை ஏற்படுத்தப்படும் என்ற அவர், தமிழகத்தில் அரசு சார்பில் இதுவரை 2கோடியே 81லட்சத்து 31ஆயிரத்து 409 பேருக்கும் , தனியார் மருத்துவமனையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் என நேற்றுவரை தமிழகத்தில் 3கோடியே 1 லட்சத்து 75,410 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றார்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5லட்சத்து 72ஆயிரத்து 898 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 1லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்தில் 22 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு கூடுதலாக தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டதில் 100 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு 100 சதவீத தடுப்பூசி அரியலூர் மாவட்டத்தில் செலுத்தப்பட்டது. பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் மன அழுத்ததில் இருக்கின்றனர். குழந்தைகள் நல மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

மாணவர்களுக்கு சத்துணவு கூடங்களில் உணவு வழங்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த சத்துணவு உணவு உதவும் என்றார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு வீடுகளுக்கே சென்று கல்வி கற்றுத் தரும் அறிவிப்பு தாய்மார்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 2ம் அலையில் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். உத்திரமேரூர் அருகே சிறார் காப்பகத்தில் 40 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒரே நாளில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாயினர், சமையல்காரர் ஒருவர் மூலம் டெல்டா வைரஸ் பாதிப்பு அவர்களுக்கு தொற்றியிருந்தது. அதை கவனத்தில் கொண்டுதான் முதலமைச்சர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்த கூறினார்.

சமூகத்தில் பெற்றோருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஆசிரியர்கள், கல்வி சார்ந்த பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மாவட்டம்தோறும் சுகாதார இயக்குநர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்தியாவில் 5 பெருநகரங்களில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட நகரம் சென்னைதான்.

சென்னை மாவட்டத்தில் 89 சதவீத ஆசிரியர் அல்லாத , கல்வி சார்ந்த களப்பணியாளர்களுக்கும், கல்வி சார் களப்பணியாளர்களான ஆசிரியர்களுக்கு 90.11 சதவீதம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 6 ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 61 ஆயிரம் பேர் என்கிற சராசரியில் தடுப்பூசி செலுத்தப்பட்டது, அதன் பின்னர் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஒருநாளில் செலுத்தப்படும் தடுப்பூசியின் சராசரி 1லட்சத்து 97 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 3கோடியே 1 லட்சத்து 75,410 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 3லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று தமிழகத்தில் 5 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுதான் தடுப்பூசியின் ஒருநாள் அதிகபட்சமாகும் என அவர் பேசினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்