புலம்பெயர் தமிழர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க, புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகின் பெரும்பான்மையான நாடுகளில் வாழும் இனமாக தமிழினம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு எனக்கூறிய அவர், வெளிநாடு வாழ் தமிழர்களின் பிரச்னைகளை தீர்க்கவும், அவர்களுக்கு உதவவும் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரை கொண்டு புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். புலம்பெயர் தமிழர் நலநிதியாக, மாநில அரசின் 5 கோடி ரூபாயை முன்பணமாக கொண்டு இந்த வாரியம் உருவாக்கப்படும் என்றும், புலம்பெயர் தமிழர் நல வாரியத்திற்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜனவரி 12ஆம் தேதி புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu