உக்ரைனில் இருந்து டெல்லி வழியாக 13 விமானங்களில் 122 பேர் சென்னை வருகை
தமிழக அரசின் அயலக நலத்துறை துணை கமிஷனர் ரமேஷ்
உக்ரைனில் போர் நடப்பதால் கடந்த சில தினங்களாக இந்தியா அரசு சிறப்பு விமானங்கள் இயக்கி இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு 6வது நாளாக 13, விமானங்களில் சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளை சேர்ந்த 122 மாணவ- மாணவிகள் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.
சென்னை வந்தவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை துணைகமிஷனர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். மாணவர்களை கண்டதும் குடும்பத்தினர் கட்டி பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர் சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
டெல்லியில் இருந்து 27 பேர் கோவைக்கு, ஒருவர் பெங்களுருக்கும், 4 பேர் திருவனந்தபுரத்திற்கும் விமானம் முலம் தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசின் அயலக நலத்துறை துணை கமிஷனர் ரமேஷ் கூறியதாவது:
உக்ரைனில் எந்த பகுதியில் மாணவர்கள் இருந்தாலும் அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். உக்ரைன் பிசாவு என்ற நகரில் வாகனம் இல்லாததால் எல்லைக்கு வர முடியவில்லை என்றனர். எல்லைக்கு வாகனத்தில் வர மாணவர்களுக்கு ரூ.13 லட்சம் பணத்தை உடனே வழங்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து எல்லைக்கு வர வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது என்றார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர் அன்பு நிதி என்பவர் கூறியதாவது: கார்கிவ் பகுதியில் தங்கி படித்து வந்தேன்.மார்ச் 1ந் தேதி வரை மெட்ரோவில் இருந்தேன். உணவுக்கு மிகுந்த கஷ்டப்பட்டோம். வடகிழக்கு பகுதியில் இருந்ததால் போலாந்து எல்லைக்கு செல்ல 1200 கிலோ மீட்டர் தூரம் இருந்தது. எந்தவொரு வாகன வசதியும் இல்லை. நாங்களாக வாகன வசதியை ஏற்படுத்தி போலாந்து எல்லைக்கு வந்தோம். உக்ரைனியர்கள் பெண்கள், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தந்து ரெயிலில் ஏற்றினார்கள். ஆண்களை உடனே ஏற்ற விடவில்லை. உணவுக்கு மிகுந்த சிரமப்பட்டோம். உக்ரைனியர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தோம். இதனால் உக்ரைனியர்கள் உணவு தந்தனர் என கூறினார்.
சென்னை முகப்பேரை சேர்ந்த மாணவர் கவுதம் கூறுகையில், போர் நடக்கும் பகுதியில் உள்ளவர்களை ரஷ்யா வழியாக தான் அழைத்து வர முடியும். சாலை வழியாக வர முடியாது. ரெயிலில் அதிகமானவர்கள் செல்ல கூடிய நிலை உள்ளது. பலியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் எனது நண்பர் தான். யாரும் எதிர்ப்பாராத நிலையில் போர் நடந்தது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu