அரசியல் தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் வழக்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!

அரசியல் தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் வழக்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!
X

ஸ்டெர்லைட் ஆலை.

அரசியல் கட்சி தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் ஆலை வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதன் அடிப்படையில், சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளை தவிர்த்து அரசியல் தலைவர்கள் மீதான மற்ற வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, முதல்வரிடம் 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், முதல்வர் 21-5-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டார்.

1. ஆர்.நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட்.

2. வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

3. கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

4. டி.டி.வி.தினகரன், துணைப் பொதுச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

5. பிரேமலதா விஜயகாந்த், மாநில மகளிரணித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

6. எல்.கே.சுதீஷ், மாநில துணைச் செயலாளர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

7. அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தற்போது அமைச்சர் (மீன்வளம்) , தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் (தெற்கு), திராவிட முன்னேற்றக் கழகம்.

8. அழகு முத்துபாண்டியன், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

9. ராஜா, மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

10. ஹென்றி தாமஸ், மாவட்டச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

11. பூமயில், மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக மகளிர் சங்கம்

12. ஆர்தர் மச்சோடா, துணைச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி.

13. பாலசிங், ஒன்றியச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்.

முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil