திடக்கழிவுகளை அகற்ற ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மை பணிகள் - சென்னை மாநகராட்சி ஆணையர்
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்கள் தேங்கக்கூடிய திடக்கழிவுகளை அகற்ற 21.06.2021 முதல் 26.06.2021 வரை ஒரு வார காலத்திற்குத் தீவிரத் தூய்மைப் பணி நடைபெறவுள்ளது என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 19) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு, இயற்கை உரமாகவும் மற்றும் உயிரி எரிவாயுவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், கடந்த மாதம் மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப் பணி தொடர்ந்து 10 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு, நீண்ட நாட்களாகத் தேங்கியிருந்த 3,260 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 10,085 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் என, மொத்தம் 13,345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு அவ்விடங்கள் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்ற மாதந்தோறும் ஒருவார காலத்திற்கு தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்கள் கண்டறியப்பட்டு, 21.06.2021 முதல் 26.06.2021 வரை ஒரு வார காலத்திற்கு தீவிரத் தூய்மைப் பணி நடைபெறவுள்ளது.
இந்த ஒரு வார காலம் நடைபெறவுள்ள தீவிரத் தூய்மைப் பணியின் மூலம் சுமார் 1,000 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 4,500 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, மாநகராட்சியின் சார்பில் தீவிரத் தூய்மைப் பணிகளைக் கண்காணிக்க மண்டலங்களுக்கு அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள தீவிரத் தூய்மைப் பணிகளை நாள்தோறும் கண்காணித்து அவ்விடங்களைத் தூய்மையாகப் பராமரிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்". இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu