போலி காசோலை மூலம் ரூ.10 கோடி அபரிக்க முயற்சி: எஸ்ஐ உட்பட 9 பேர் கைது
போலி காசோலை மூலம் தனியார் வங்கியில், ரூ.10 கோடி வரையில் மோசடி செய்ய முயன்ற போலீஸ் எஸ்ஐ. மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, புரசைவாக்கம், ராஜா அண்ணாமலை சாலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு, கோவையைச் சேர்ந்த சாவித்ரி(40) விருகம்பாக்கம், அன்னபூரணி அறக்கட்டளையைச் சேர்ந்த பானுமதி( 44), கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மேத்யூ( 45) திருச்சியைச் சேர்ந்த அக்கீம்ராஜா(41 )ஆகியோர் சென்றனர். இவர்கள், நாங்கள் நடத்தி வரும் அன்னபூரணி அறக்கட்டளைக்கு, ம.பி., மாநிலம், போபாலில் செயல்படும், 'திலிப் பில்டுகான்' என்ற கட்டுமான நிறுவனம், ரூ.10 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது. இந்த தொகையை, அண்ணா சாலையில் செயல்படும், ராம் சரண் என்ற நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும் என கூறினர்.
மேலும், கட்டுமான நிறுவனம், நன்கொடையாக கொடுத்ததாக, 9 கோடியே, 99 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் கொடுத்துள்ளனர்.இந்த காசோலை குறித்து வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, வங்கி மேலாளர் அமித் குமார், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.அந்நிறுவன அதிகாரிகள், 'நாங்கள் யாருக்கும் இவ்வளவு தொகை நன்கொடை அளிக்கவில்லை. அதற்கான காசோலையும் தரவில்லை. ஆனால், 2018ல், தொழில் ரீதியாக எங்களுடன் தொடர்பில் உள்ள சச்சின் என்பவருக்கு, 8,737 ஆயிரம் ரூபாய்க்காக தரப்பட்ட காசோலையை தான், உங்கள் வங்கியில் கொடுத்துள்ளனர்' என, கூறியுள்ளனர்.
இதையடுத்து, வங்கி மேலாளர் அமித்குமார் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வங்கிக்கு விரைந்து சென்று, சாவித்ரி உள்ளிட்ட நான்கு பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது, அண்ணா சாலையில், ராம் சரண் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் கவுசிக் என்பவர் உதவியுடன், போலி காசோலை வாயிலாக மோசடியில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. கவுசிக்கிற்கு, கமிஷனாக, 5 கோடி ரூபாய் தருவதாக ஒப்பந்தம் போட்டதும் தெரியவந்தது. இந்த மோசடியின் பின்னணியில், கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் காவல் நிலைய எஸ்.ஐ., முருகன்( 55) என்பவர், மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. சாவித்ரிக்கும் இவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடி தொடர்பாக, முருகன், சாவித்ரி உட்பட, 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கட்டுமான நிறுவனத்தின் காசோலை இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வரும் போலீசார், மோசடிக்கு உடந்தையாக இருந்த கவுசிக் உள்ளிட்ட மேலும், 10 பேரையும் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu