9-12 ம் வகுப்பு மாணவர்ளுக்கு 3 வாரம் அடிப்படை பயிற்சி: பள்ளி கல்வித்துறை

9-12 ம்  வகுப்பு மாணவர்ளுக்கு 3 வாரம் அடிப்படை பயிற்சி: பள்ளி கல்வித்துறை
X

பைல் படம்.

மாணவர்கள் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு அடிப்படை பயிற்சி நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள். நேரடி வகுப்பு நடைபெறாததால் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு அழைத்து நேரடி வகுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. 16 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு தொடக்கத்திலேயே பாடத்திட்டங்களை நடத்த வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக அடிப்படை இணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் இளமாறன் கூறியதாவது:

மாணவர்கள் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு அடிப்படையான பயிற்சி வழங்கினால் ஆர்வத்தோடு வகுப்புகளை கவனிப்பார்கள். எடுத்த உடனேயே பாடத்திட்டத்தை நடத்தினால் அவர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை. அதனால் முந்தைய வகுப்பு பாடங்களை நினைவுபடுத்தி படிப்படியாக புதிய பாடத்திற்குள் கொண்டு வருவது எளிதாக இருக்கும். சிரமங்கள் இல்லாமல் மாணவர்கள் படிக்க ஆர்வம் ஏற்படும்.

கடந்த 2015 ஆண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதும், 2017-புதிய பாடத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட போதும் இந்த அடிப்படை இணைப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இது மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் என தெரிவித்தார்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil