ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன்
பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஓமிக்ரான் வைரஸ் அதிகம் பரவும் தன்மை கொண்டது. ஆனால் அதன் வீரியம் இன்னும் கேள்விக் குறியாக உள்ளது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி:- ஓமிக்ரான் புதிய உருமாறிய வைரஸ் பரவல் சம்பந்தமாக தமிழகத்தில் இருக்கின்ற சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் 11 அதிக ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும், குறைந்த ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து வருகை புரிந்தவர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை இன்று ஒரே நாளில் காலை முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஆய்வு முடித்தபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஓமிக்ரான் புதிய உருமாறிய வைரஸ் பரவல் சம்பந்தமாக தமிழகத்தில் இருக்கின்ற சர்வதேச விமான நிலையங்கள் கண்காணிக்கப்படுகின்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. கடந்த வாரம் புதிய வைரஸ் ஒன்று தென்னாப்பிரிக்காவில் இருந்து உருவாகி இருக்கிறது என்ற செய்தி கிடைத்தவுடன் சென்னை விமான நிலையத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஓமிக்ரான் வைரஸ் பரவல் குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, போஸ்ட்வானா, ஹாங்காங் மற்றும் பிரேசில் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே 60 முதல் 70 வரையிலான எண்ணிக்கையில் பரவல் இருந்தபோதே சென்னை விமான நிலையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிப்பதற்கும் அவர்களுடைய மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்தார்.
ஒமிக்ரான் வைரஸ் பரவல் மிகப்பரவலாக உலகில் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, பிரேசில், நியூசிலாந்து, மொரீசியஸ், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற 11 அதிக தொற்று பாதிப்பு உள்ள நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளன. இந்த பதினோரு நாடுகளிலிருந்து வரும் பயணிகளை அவர்களுடைய வருகை சம்பந்தமான விபரங்களை எடுத்து ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் வருகை. புரியும் அனைவருடைய மாதிரிகளை எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை சர்வதேச விமான நிலையத்தில் குறைந்த ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து 4 பயணிகளும், கோவை சர்வதேச விமான நிலையத்தில் குறைந்த ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து 12 பயணிகளும், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிக ஆபத்துள்ள நாடுகளிலிருந்து 663 பயணிகளும், குறைந்த ஆபத்து உள்ள நாட்டிலிருந்து 1 பயணியும் மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 11 அதிக ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து 1013 பயணிகளும், குறைந்த பாதிப்புள்ள நாடுகளிலிருந்து 169 பயணிகளும் வருகை தந்தனர்.
ஆக மொத்தம் இன்று ஒரு நாளில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களிலிருந்து அதிக ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து 1,676 பயணிகள் வருகை புரிந்தனர். அவர்களுக்கு 100 சதவிகிதம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்த ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து 186 பயணிகளும் வருகை புரிந்திருந்தனர். அவர்களில் 2 சதவிகிதம் பேருக்கு உடல் வெப்ப பரிசோதனை, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இப்பரிசோதனை முடிவுகள் மேற்கொண்ட 1,862 பயணிகளில் ஒருவருக்குக்கூட ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை விமான நிலையத்தில் தங்க வைக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு மருத்துவமனை தனிமை அவசியமற்றது. கர்நாடகாவில் இரண்டு நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை நலமுடன் இருக்கின்றனர். அண்டை மாநிலங்களுக்கு போக்குவரத்து தடை செய்வது அவசியமற்றது.
ஓமிக்ரான் 30 நாடுகளில் பரவியுள்ளது. பரவும் தன்மை அதிகம் உள்ளதே தவிர அதன் வீரியம் கேள்விக்குறியாக உள்ளது. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது. எனவே மக்கள் விரைந்து முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் ஓமிக்ரான் குறித்து அச்சப்பட தேவையில்லை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu