அரியலூர் கொள்ளிடக்கரையில் சுற்றித் திரியும் அரியவகை லங்கூர் குரங்கு

அரியலூர் கொள்ளிடக்கரையில் சுற்றித் திரியும் அரியவகை லங்கூர் குரங்கு
X

கொள்ளிடக்கரையில் சுற்றித் திரியும் லங்கூர் குரங்கு 

தா.பழூர் கொள்ளிடக்கரையில் சுற்றித் திரியும் லங்கூர் குரங்கை மீட்டு பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகில் உள்ள கொள்ளிடக்கரை கிராமங்களான மேலக்குடிகாடு, தென்கச்சிபெருமாள்நத்தம், கீழக்காடு, கோடாலிகருப்பூர் வனப்பகுதி, கூத்தங்குடி ஆகிய பகுதிகளில் வித்தியாசமான உருவ அமைப்பு கொண்ட ஒற்றை குரங்கு கடந்த சில நாட்களாக சுற்றித் திரிவதாக, தா.பழூர் வட்டார பகுதியில் தகவல் பரவியது. இந்நிலையில் மேலக்குடிகாடு கிராமத்தில் இருந்த அந்த ஒற்றை குரங்கை அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தனர்.

அப்போது அந்த குரங்கு, பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் அழிந்து வரும் அரிய வகை குரங்கு இனமான லங்கூர் வகையை சேர்ந்த என்பது தெரியவந்தது. அந்த குரங்கின் உடல் முழுவதும் சாம்பல் நிறத்துடனும், முகம் மட்டும் கருப்பு நிறத்திலும் காட்சி தருகிறது. தலையில் அதிக அளவு முடியுடன் காணப்படும் லங்கூர் குரங்கு, வட இந்திய பகுதியிலும், நேபாளம் நாட்டிலும் அனுமன் குரங்கு என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்த அளவில் முதுமலை காடுகள் மற்றும் மலைப்பகுதியை ஒட்டிய காவிரிப் படுகைகளில் ஆங்காங்கே குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன. அழிந்து வரும் வகையான லங்கூர் குரங்குகளை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்து வரும் லங்கூர் குரங்கு, திசைமாறி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கூட்டத்தில் இருந்து ஒற்றை குரங்கு மட்டும் பிரிந்து வந்ததா? அல்லது கூட்டமாக இந்தப் பகுதிகளில் வாழ்கின்றனவா? என்பது சரியாகத் தெரியவில்லை. அந்த குரங்கிற்கு சமூக விரோதிகளால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே வனத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றுப் படுகைகளில் ஆய்வு மேற்கொண்டு, அந்த குரங்கை மீட்டு லங்கூர் வகை குரங்குகள் அதிக அளவில் வாழும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்