ஒருகிலோ முருங்கை 50 பைசா: கடும் விலை வீழ்ச்சியால் நிலைகுலைந்த விவசாயிகள்

ஒருகிலோ முருங்கை 50 பைசா: கடும் விலை வீழ்ச்சியால் நிலைகுலைந்த விவசாயிகள்
X

பறிக்காமல் மரத்திலேயே விடப்பட்டுள்ள முருங்கை காய்.  

ஒரு கிலோ முருங்கைக்காய்கள் 50 பைசாவிற்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தோட்டப்பயிராக முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தா.பழூர், காரைக்குறிச்சி, இருகையூர், நாயகனைப்பிரியாள், அணைக்குடம் பொற்பொதிந்தநல்லூர், சோழமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தீவிர முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உற்பத்தி செய்த முருங்கைக்காய்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு உள்ளூர் வியாபாரிகள் மூலமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக விவசாயிகளிடம் இருந்து 1 கிலோ முருங்கைக்காய் 1 ரூபாய்க்கும் குறைவான விலையில் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த வாரத்தில் ஒரு கிலோ முருங்கைக்காய் 50 பைசாவுக்கு விலை பேசப்பட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பருவத்தில் முருங்கை விவசாயம் செய்ய ரூ.22 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.10-க்கு குறைவாக கொள்முதல் செய்யப்பட்டால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்படும். இந்நிலையில் 50 பைசாவிற்கு முருங்கைக்காய்கள் விலை பேசப்படுவதால் விவசாயிகள் நிலை குலைந்து உள்ளனர்.

மேலும் மனமுடைந்த நிலையில் முருங்கை செடியில் இருந்து காய்களை பறிக்கும் பணியை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர். முருங்கைக்காய்கள் பறிக்கப்படாததால் செடியிலேயே சடை, சடையாக தொங்குகின்றன. தற்போது விற்கும் விலைக்கு 600 கிலோ முருங்கைக்காய் விற்பனை செய்தால் மட்டுமே ஒரு தொழிலாளிக்கு கூலி வழங்க முடியும். எனவே அரசு முருங்கைக்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்